

ஜெயம் ரவி நடிப்பில் தயாராகி இருக்கும் 'பூலோகம்' படத்துக்கு கடன் வசூல் தீர்ப்பாயம் தடை விதித்திருக்கிறது.
கல்யாண் இயக்கத்தில் ஜெயம் ரவி, த்ரிஷா நடித்திருக்கும் படம் 'பூலோகம்'. ஆஸ்கர் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது. நீண்ட நாட்களாக இப்படம் தயாரிப்பில் இருந்து வருகிறது. 'ஐ' வெளியாகி விட்டதால் விரைவில் இப்படம் வெளியாகும் என்று செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், இப்படத்துக்கு எதிராக கடன் வசூல் தீர்ப்பாயம் தடைவிதித்திருக்கிறது. 'பூலோகம்' படத்தை தயாரிக்க ஆஸ்கர் நிறுவனம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.40 கோடி கடன் பெற்றுள்ளது.
படம் விரைவில் வெளியாகும் என்று பேச்சு எழுந்துள்ள நிலையில், ரூ.40 கோடியை செலுத்தாமல் 'பூலோகம்' படத்தை வெளியிடுவதற்கு ஆஸ்கர் நிறுவனத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் முழுத் தொகையையும் செலுத்திய பிறகே படத்தை திரையிட அனுமதிக்க வேண்டும் என்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சென்னையில் உள்ள கடன் வசூல் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், 'பூலோகம்' படத்தை திரையரங்கில் வெளியிடவோ, வீடியோ மற்றும் ஆடியோ காப்பிகள் எடுக்க, தொலைகாட்சியில் வெளியிட உள்ளிட்ட அனைத்து விதங்களுக்கும் தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
மேலும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவுக்கு பதிலளிக்கவும் ஆஸ்கர் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.