

'கோ' படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் சிம்ஹா, நிக்கி கல்ராணி, பிரகாஷ்ராஜ் நடிக்கும் 'கோ 2' படத்தையும் தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறது.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா, கார்த்திகா நாயர், பியா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கோ'. மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வசூலிலும் சாதனை படைத்தது.
தற்போது அப்படத்தின் இரண்டாவது பாகத்தில் சிம்ஹா நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். நிக்கி கல்ரானி, பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். புதுமுக இயக்குநர் சரத் இயக்க இருக்கிறார்.
'கோ 2' குறித்து தயாரிப்பாளர் எல்ரெட் குமார் கூறியிருப்பது, "எங்கள் நிறுவனத்தின் ‘கோ’ படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்று வெகுவாய் ஒரு எண்ணம் ஓடிக் கொண்டே இருந்தது. விஷ்ணு வர்தன், சக்ரி டோலெட்டி ஆகியோரிடம் உதவி இயக்குனராய் பணி புரிந்துள்ள சரத் கதையை கேட்க நேர்ந்தது. கதையைக் கேட்டு முடிக்கும் முன்னர் இப்படத்தை எங்கள் நிறுவனம் தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். ஒரு படத்தின் ‘Sequel’ என்றால் அதே குழு, மற்றும் நடிகர்கள் நடிக்க வேண்டும் என்றல்லாமல் அந்தக் கதை அந்த தலைப்புக்கு ஏற்றவாறு உள்ளது என்று யோசித்தோம். அதன் விளைவே ‘கோ-2’ விரைவில் தயாராகவுள்ளது" என்று தெரிவித்திருக்கிறார்.