உலகத்தரம் வாய்ந்த சிம்பொனி இசைக்குழுவை தமிழகத்தில் தொடங்க திட்டம்: ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு

உலகத்தரம் வாய்ந்த சிம்பொனி இசைக்குழுவை தமிழகத்தில் தொடங்க திட்டம்: ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு
Updated on
1 min read

உலகத்தரம் வாய்ந்த சிம்பொனி இசைக் குழுவை தமிழகத்தில் தொடங்க திட்டமிட்டிருப்பதாக இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறினார்.

பொருளாதார ரீதியாக பின்தங்கிய குழந்தைகளுக்காக சென்னையில் கே.எம்.இசை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியை இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நடத்திவருகிறார். இப்பள்ளியின் சன்ஷைன் இசைக்குழு திட்டம் மூலம் மாணவர்களுக்கு இசைப்பயிற்சி அளிக்க ஹர்மேன் இந்தியா நிறுவனம் இணைந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் 2 ஆண்டுகளில் 200 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

இதுகுறித்து அறிவிப்பதற்காக சென்னை கே.எம்.இசைக் கல்லூரியில் செய்தியாளர்களை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சன்ஷைன் இசைக்குழுவில் பயிலும் மாணவர்கள் பெர்க்லீ பல்கலைக்கழகத்தில் இசைப் படிப்பு படிக்க அனுப்ப உள்ளோம். இசை குறித்த படிப்பை வழங்குவதில் முன்னணியில் உள்ள பெர்க்லீ பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் பயிற்சி பெற வேண்டும் என்று விரும்பினேன்.

அந்த பல்கலைக்கழகத்தில் நான் சேர விரும்பி விண்ணப்பிக்க தயாரானபோதுதான் ‘ரோஜா’ பட வாய்ப்பை மணிரத்னம் வழங்கினார். இதுவா, அதுவா? என்றபோது ‘ரோஜா’ படத்துக்கு இசையமைக்கும் வேலையில் இறங்கினேன். பின்னாளில் அதே பல்கலைக்கழகம் எனக்கு டாக்டர் பட்டம் அளித்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. இசைக்கு சிறப்பு சேர்க்கும் அந்த பல்கலைக்கழகத்தில் இசைத் திறமை கொண்ட நமது மாணவர்கள் பயிற்சி பெறப்போவது கூடுதல் மகிழ்ச்சி.

இளையராஜா போன்ற முக்கிய இசையமைப்பாளர்கள் சிம்பொனி இசைக்கோர்ப்பு பணிக்காக லண்டன், புடாபெஸ்ட் செல்கின்றனர். இங்கு நம் ஊரிலேயே உலகத் தரத்திலான சிம்பொனி இசைக்குழுவை உருவாக்கவே சன்ஷைன் குழுவை தயார்படுத்தி வருகிறேன். அடுத்த 5 ஆண்டுகளில் இங்கு இசை பயில்பவர்கள் சர்வதேச அளவில் திறன்பெற்றவர்களாக இருப்பார்கள். சிம்பொனி இசை என்றாலே வெளிநாட்டுக்குதான் செல்லவேண்டும் என்ற நிலை இனி இருக்காது. தமிழ்நாட்டிலேயே அதை பெறமுடியும்.

இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in