

சிவகார்த்திகேயன் நடித்து வந்த 'ரஜினி முருகன்' படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்து, இறுதி கட்டப் பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
'காக்கி சட்டை' படத்தைத் தொடர்ந்து பொன்.ராம் இயக்கி வரும் 'ரஜினி முருகன்' படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். கீர்த்தி சுரேஷ், சூரி, ராஜ்கிரண், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் சிவகார்த்திகேயனோடு நடித்து வருகிறார்கள். இமான் இசையமைத்து வரும் இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் தயாரித்து வருகிறது.
'ரஜினி முருகன்' படத்தின் நாயகியான கீர்த்தி சுரேஷிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் கீர்த்தி சுரேஷ் உடல்நிலை சரியாகி வந்தவுடன் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடத்தி வந்தார்கள்.
மொத்த படப்பிடிப்பும் ஏப்ரல் 17ம் தேதியோடு முடிவுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து இறுதிகட்டப் பணிகளைத் தொடங்கி இருக்கிறார்கள்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் ஏப்ரல் 25ம் தேதியும், இசை வெளியீட்டு ஜுன் 7ம் தேதியும், ஜுலை 17ம் தேதி படமும் வெளியாகும் என ஏற்கனவே படக்குழு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.