

'ஐ' படத்தைத் தொடர்ந்து ஷங்கர் இயக்க உள்ள அடுத்த படத்தில் ரஜினி நடிக்க இருப்பதாகவும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருப்பதாகவும் தகவல்கள் கசிகின்றன.
விக்ரம், ஏமி ஜாக்சன் நடிக்க, ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் 'ஐ'. அப்படத்தைத் தொடர்ந்து ஷங்கரின் அடுத்த படம் குறித்து பல்வேறு செய்திகள் வெளியானவண்ணம் உள்ளன.
'லிங்கா' படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஒரு ஹிட் கொடுத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார் ரஜினி. இதனால் ஷங்கர் - ரஜினி கூட்டணி மீண்டும் சேர வாய்ப்பு இருக்கிறது என தகவல் வெளியானது.
இந்நிலையில், சில நாட்களாக ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது என்ற செய்தி சமூக வலைத்தளத்தை வட்டமிட்டு இருக்கிறது.
இச்செய்தி குறித்து லைக்கா நிறுவனத்திடம் விசாரித்த போது, "அப்படியா.. நீங்கள் கூறும் தகவல் எங்களுக்கே புதுசு. அப்படி ஒரு திட்டமில்லை" என்றார்கள்.
மேலும், தற்போது மும்பையில் கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார் இயக்குநர் ஷங்கர். அவரிடம் கலந்து ஆலோசிக்கவே ரஜினி சமீபத்தில் மும்பை சென்று வந்தார் என்றும் செய்திகள் வெளியாகிறது.
ரஜினி, ஷங்கர் இருவரைப் பொறுத்தவரையிலும் எந்த ஒரு செய்தியையும் அதிகாரபூர்வ அறிக்கையாக வெளியாகாத வரை வெவ்வேறு செய்திகள் வெளியாகிக் கொண்டே இருக்கும். இச்செய்தியை மறுக்கப் போகிறார்களா... இல்லையென்றால் உண்மை என்கிறார்களா இருவரும் என்பது விரைவில் தெரியும்.