

சூர்யா நடித்துவரும் 'மாஸ்' படத்துக்காக 'ஆர்.. ராஜ்குமார்' படத்தின் 'கந்தி பாத்' பாட்டின் உரிமையை வாங்கி உபயோகப்படுத்தி இருக்கிறார்கள்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா, பிரேம்ஜி, சமுத்திரக்கனி, பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் 'மாஸ்'. யுவன் இசையமைத்து வரும் இப்படத்துக்கு ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது.
மே 1ம் தேதி 'மாஸ்' வெளியாகும் என தகவல் வெளியானது. ஆனால், படத்தின் பணிகள் இன்னும் முடிவடையாததால் எப்போது வெளியீடு என்பது இன்னும் உறுதியாகவில்லை.
ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் தமன் பணியாற்றி இருக்கிறார் என்று செய்திகள் வெளியாகின. அதற்கு படத்தின் இசையமைப்பாளர் யுவன் "அப்பாடலுக்கு மெட்டு அமைத்தது நான், அந்த மெட்டுக்கு இசை வடிவம் தமன் கொடுத்தார் " என்று விளக்கம் அளித்தார்.
"உண்மையைக் கூற வேண்டுமானால், பிரபுதேவா இயக்கத்தில் ஷாகித் கபூர், சோனாக்ஷி சின்ஹா நடித்த 'ஆர்..ராஜ்குமார்' படத்தில் இடம்பெற்ற 'கந்தி பாத்' என்ற பாடல் மிகவும் பிரபலம். அப்பாடலின் உரிமையை தமிழுக்கு வாங்கி, அதற்கு ஏற்றவாறு தமிழ் வரிகள் அமைத்து உபயோபடுத்தி இருக்கிறார்கள். அப்பாடலுக்கு தான் தமன் பணியாற்றி கொடுத்தார் " என்று படக்குழுவில் பணியாற்றும் ஒருவர் தெரிவித்தார்.
விரைவில் 'மாஸ்' படத்தின் இசை வெளியாக இருக்கிறது. உண்மையில் நடந்தது என்ன என்பது அப்போது தெளிவாக வெளிவரப் போகிறது.
</p>