

மார்ச் 22ம் தேதி 'லிங்கா' 100வது நாள் விழாவை சென்னை ஆல்பட் திரையரங்கில் பிரம்மாண்டமாக கொண்டாட திட்டமிட்டு இருக்கிறார்கள்.
கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடித்த 'லிங்கா' திரைப்படம் ரஜினி பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதி வெளியானது. சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா, ஜெகபதி பாபு, கே.விஸ்வநாத் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்திருந்த இப்படத்தை ஈராஸ் நிறுவனம் வெளியிட்டது.
இப்படம் வெளியான சில நாட்களிலேயே எதிர்பார்த்த வசூல் இல்லை, படம் நஷ்டம் என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ரஜினி நடித்த படங்களில் பெரும் நஷ்டமடைந்த படம் 'லிங்கா' என்று விநியோகஸ்தர்கள் போர்க்கொடி தூக்கினார்கள்.
விநியோகஸ்தர்களின் பிரச்சினையை சரி செய்ய தற்போது வரை பலதரப்பட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் அனைவரையும் சேர்த்து 33 கோடி நஷ்டம் என்று அறிக்கை வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், 'லிங்கா' படத்தின் 100வது நாள் விழாவை சென்னை ஆல்பட் திரையரங்கில் பிரம்மாண்டமாக கொண்டாட ரஜினி ரசிகர்கள் தீர்மானித்திருக்கிறார்கள். இதற்கான ஏற்பாட்டை சைதாப்பேட்டையில் உள்ள ரஜினி ரசிகர் மன்றம் செய்திருக்கிறது.
மாலை 6:30 மணி காட்சிக்கு, 4 மணிக்கே திரையரங்கில் கூடி ரஜினிக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை விநியோகஸ்தர்களுக்கு காட்ட வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறார்கள். இக்காட்சிக்கு இணையம் மூலமாக ரஜினி ரசிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.