

எடிட்டர் கிஷோர் இல்லாமல் எனது படங்கள் முழுமை அடையாது என்று இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்தார்.
'ஆடுகளம்' படத்தில் எடிட்டர் கிஷோருடன் இணைந்து பணியாற்றிவர் இயக்குநர் வெற்றிமாறன். தொடர்ச்சியாக வெற்றிமாறன் படங்களின் எடிட்டராக கிஷோர் பணியாற்றி வந்தார்.
வெற்றிமாறன் இயக்கி வரும் 'விசாரணை' படத்தில் பணிபுரிந்து வந்தபோதுதான் கிஷோருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது.
கிஷோரின் இழப்பு குறித்து நம்மிடம் இயக்குநர் வெற்றிமாறன் கூறும்போது, "என்னுடைய 'விசாரணை' படத்தின் எடிட்டிங் பணிகளை கவனித்துக் கொண்டிருந்த போது தான் மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்.
"சாப்பிடாமல் இருந்ததால் தான் சோர்வாக இருக்கிறது. சரியாகிவிடுவேன் சார்" என்று கிஷோர் கூறினார். ஆனால் தலைதான் வலிக்கிறது என்று கூறியவுடன் ஸ்கேன் பரிசோதனை செய்து பார்த்த போது தான் மூளையில் ரத்த உறைவு கண்டுபிடித்து ஆபிரேஷன் செய்யப்பட்டது. அதற்கு பிறகு நடந்தவை உங்களுக்கே தெரியும்.
எடிட்டர் கிஷோர் என்னுடைய படங்களில் பணிபுரிபவர் என்பதை எல்லாம் தாண்டி எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர். அவருடைய பணிகளால் என்னுடைய படங்களை முழுமையடைய வைத்தார்.
அவருடைய மறைவால் இனிமேல் என்னுடைய படங்கள் யாவும் முழுமை அடையாமல் தான் இருக்கும்" என்று கூறினார்.
தற்போது எடிட்டர் கிஷோரின் உடல் திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவருடைய அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது. எடிட்டர் மோகன், ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட திரையுலகினர் பலர் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
இன்று (சனிக்கிழமை மாலை 4 மணியளவில் அவருடைய சொந்த ஊரான விழுப்புரத்திற்கு உடல் தகனத்திற்கு கொண்டு செல்ல இருக்கிறார்கள்.
இயக்குநர் வெற்றிமாறன்