படப்பிடிப்பில் விபத்து: சசிகுமாருக்கு கையில் எலும்பு முறிவு

படப்பிடிப்பில் விபத்து: சசிகுமாருக்கு கையில் எலும்பு முறிவு
Updated on
1 min read

இயக்குநர் பாலாவின் 'தாரை தப்பட்டை' படபிடிப்பில் நிகழ்ந்த விபத்தில், நடிகரும் இயக்குநருமான சசிகுமாரின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக 'தாரை தப்பட்டை' படக்குழு கூறியது:

பாலா எழுதி இயக்கி வரும் 'தாரை தப்பட்டை' படத்தில் எம்.சிசிகுமார், வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படபிடிப்பு சென்னையில் துவங்கி தொடர்ந்து தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுபுர இடங்களிலும் படமாக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரமாக நடிகர் சசிகுமார் வில்லனுடன் மோதும் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டு வந்தது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சண்டைக்காட்சியின் போது யாருக்கும் விபத்து ஏதும் நேர்ந்தால் உடனடியாக சிகிச்சை பெற மருத்துவர்கள் குழுவும், 2 ஆம்புலன்சும் தயார் நிலையில் இருந்தனர்.

இந்த நிலையில், இன்று படமாக்கப்பட்ட அதிரடியான சண்டைக்காட்சி தொடர்ச்சியின்போது நடிகர் சசிகுமார் சற்றும் எதிர்பாராத வகையில் விபத்துக்குள்ளானார். அவரது இடது கை எலும்பு முறிந்தது.

உடனடியாக அங்கிருந்த மருத்துவ குழுவினர் உதவியோடு ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சைக்கு பின் சசிக்குமாரின் இடது கைக்கு மாவு கட்டு போடப்பட்டுபட்டது.

சிறிது காலம் ஒய்வெடுக்கும்படி மருத்துவர்கள் சசிகுமாருக்கு அறிவுறுத்தியுள்ளதால் இயக்குனர் பாலா படபிடிப்பை தற்காலிகமாக நிறுத்தியுள்ளார். நடிகர் மற்றும் இயக்குனர் சசிக்குமார் ஒய்வெடுக்க மதுரை சென்றுள்ளார். படக்குழுவினர் சென்னை திரும்புகின்றனர்.

சசிகுமார் உடல்நலம் முழுமையாக குணமடைந்ததும் படபிடிப்பு துவங்கும் என்று படக்குழு தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in