தயாரிப்பில் தீவிரம் காட்டும் இயக்குநர் சுந்தர்.சி

தயாரிப்பில் தீவிரம் காட்டும் இயக்குநர் சுந்தர்.சி
Updated on
1 min read

'அரண்மனை' படத்தைத் தொடர்ந்து, தயாரிப்பு நிறுவனம் மூலம் தொடர்ச்சியாக படங்கள் தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறார் சுந்தர்.சி

சுந்தர். சி இயக்கி நடித்த 'அரண்மனை' படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படம் குறித்து விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்.

மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'வெள்ளிமூங்கா' படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியிருக்கிறார் சுந்தர்.சி. முழுக்க காமெடி கலந்த இப்படத்தில் சுந்தர்.சியே நாயகனாக நடிக்க முடிவு செய்திருக்கிறார். இப்படத்தை இயக்கவிருப்பது யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

இந்நிலையில், 'நாளைய இயக்குநர்' நிகழ்ச்சியில் முதல் பரிசு வென்ற பாஸ்கரை இயக்குநராக தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் இயக்குநராக அறிமுகப்படுத்துகிறார். இப்படத்தின் நாயகனாக வைபவ் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். பாஸ்கர் இயக்கிய 'ஜிகினா' என்ற குறும்படம் பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய சுந்தர்.சி படங்களில் பாஸ்கர் உதவி இயக்குநராக பணியாற்றி வந்தார். தற்போது சுந்தர்.சியின் தயாரிப்பு நிறுவனத்தில் முதல் படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பதால் கடும் சந்தோஷத்தில் இருக்கிறார் பாஸ்கர்.

ஏப்ரல் 10ம் தேதி படத்தின் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டு இருக்கிறார். இதர நடிகர், நடிகைகள் உள்ளிட்ட தேர்வு ஆகியவை தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in