சினிமாவில் ஜெயிப்பதற்கு காத்திருத்தல் மிகவும் அவசியம்: ஜெ.வடிவேல் சிறப்புப் பேட்டி

சினிமாவில் ஜெயிப்பதற்கு காத்திருத்தல் மிகவும் அவசியம்: ஜெ.வடிவேல் சிறப்புப் பேட்டி
Updated on
2 min read

இயக்குநர் மிஷ்கினிடம் உதவியாளராக இருந்த ஜெ.வடிவேல், சினிமாவைப் பின்னணியாகக் கொண்ட ‘கள்ளப்படம்’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். படத்தை முடித்து அதன் ரிலீசுக்காக காத்திருக்கும் அவரைச் சந்தித்தோம்.

சினிமா பின்னணியை களமாகக் கொண்டு நிறைய படங்கள் வெளிவந்துள்ளன. இந்தச் சூழலில் சினிமா பற்றி ‘கள்ளப்படம்’ புதிதாக என்ன சொல்லப்போகிறது?

இது சினிமா சார்ந்த கதைதான். ஆனால், இந்தப் படத்தை ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையோடு இணைத்துக்கொள்ளலாம். கணினித்துறை அல்லது கட்டிடத்துறையில் வேலைக்கு சேர்பவருக்கு அந்த நிறுவனத்தின் உயர்ந்த பொறுப்பை அடையவேண்டும் என்பது கனவாக இருக்கலாம்.

அங்கே வெற்றி மட்டும்தான் அவர்களின் லட்சியம். அதைப்போலவே சினிமா எடுக்க போராடும் நான்கு பேரின் கதையை இப்படத்தில் சொல்கிறோம். சினிமாவின் பின்னணியில் சொன்னால் எல்லா தொழில்களோடும் இணைத்துக்கொள்ள முடியும் என்பதால் அந்தக் களத்தில் பயணித்தோம்.

ஒரு அறிமுக இயக்குநராக சினிமாவில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்ன?

காத்திருத்தல்தான். 2012-ல் சினிமாவுக்காக கதை எழுதினேன். 2013-ல் படம் இயக்க ஒப்பந்த மானேன். 2014-ல் படத்தை இயக்கினேன். 2015-ல் படம் ரிலீஸ் ஆகிறது. இந்தக் காத்திருத்தலை ஒரு தவமாக நினைத்து நம்பிக்கையோடு இருந்த தால்தான் இன்று எல்லாமும் சாத்தியமானது. சினிமாவில் ஜெயிப்பதற்கு காத்திருத்தல் மிகவும் அவசியம்.

பெரிய ஹீரோக்களை வைத்து இந்தப் படத்தைச் செய்திருந்தால் வியாபாரரீதியாக தாமதம் இருந்திருக்காதே?

இந்தக் கதைக்கு பெரிய நடிகர்கள் பொருந்த மாட்டார்கள். முதல் பட வாய்ப்புக்காக ஓடி அலையும் இளைஞர்களின் கதை இது. பெரிய ஹீரோக்கள் இதில் நடித்தால் அவர்கள் மட்டுமே படத்தில் தெரிவார்கள். அதனால் கதையின் போக்கு மாறும். அதேநேரத்தில் இந்தப் படத்தில் நடிக்க சினிமா அனுபவம் உள்ளவர்கள் தேவைப்பட்டார்கள். அப்போதுதான் நாமே, நடித்தால் என்ன? என்ற யோசனை வந்தது.

இதைத்தொடர்ந்து படத்தின் இயக்குநர், கேமராமேன், இசை யமைப்பாளர், எடிட்டர் என்று நாங்கள் நால்வருமே நடிக்க முடிவெடுத்தோம். ஒரு எடிட்டர் கேமரா முன் நிற்பது இங்கே அரிதான விஷயம். முதல் இரண்டு நாட்கள் கேமரா முன் ரொம்பவே கஷ்டப்பட்டோம். அடுத்தடுத்த நாட்களிலிருந்து விறுவிறுவென படம் தயாரானது.

இயக்குநர் மிஷ்கின் இப்படத்துக்காக பாடல் எழுதி, பாடியுள்ளதாக கேள்விப்பட்டோமே உண்மையா?

மிஷ்கின் சார் ஒருமுறை ‘இனி என் படங்களில் பாட்டு இருக்காது’ என்று ஒரு பேட்டி கொடுத்தார். அதேபோல, அவருடைய ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘பிசாசு’ ஆகிய படங்களில் பாடலுக்கு முக்கியத் துவம் கொடுக்கவில்லை. ஆனால், அவரது இசை ஆர்வம் வியப்புக் குரிய விஷயம். அவரது இசை அறிவை பயன்படுத்த வேண்டும் என்று தோன்றியது. இதுபற்றி அவரிடம் கேட்டபோது, ‘வெள்ளக் கார ராணி’ என்ற பாடலை எழுதி, பாடியும் தந்தார்.

முழு படமும் தயாரானதும் அதை பாலா சாருக்கு போட்டுக் காட்டினேன். படத்தைப் பார்த்த அவர், ‘பிடிக்கலைன்னா இல் லைனு சொல்றவன் நான்’ என்று ஆரம்பித்து, காட்சிக் காட்சியாய் 30 நிமிடங்கள் பாராட்டிவிட்டு, ‘நம்பிக்கையோடு இரு நல்ல எதிர்காலம் இருக்கு’ என்று கூறினார். எனக்கு இதுவே போதும்.

நகைச்சுவை நடிகர் செந்தில் இப்படத்தில் நீண்ட நாட்களுக்குப் பின் நடிக்கிறாரே?

கதைக்கு இவர்தான் சரியாக இருப்பார் என்று நினைத்தேன். ஒப்புக்கொள்வாரோ, மாட்டாரோ என்கிற நிலையோடுதான் அவரைச் சந்தித்தோம். அவரிடம் கதாபாத்திரத்தை விளக்கினேன். எத்தனை நாட்கள் கால்ஷீட் என்றார்.

மொத்தமாக 4 மணி நேரம் மட்டும் போதும் என்றேன். ஆச்சரியமாக பார்த்து விட்டு உடனே சம்மதம் தெரிவித்தார். படத்தில் ஒரு நிமிடம்தான் வருவார். ஆனால் அதுவே படம் முழுக்க அவர் இருக்கும் உணர்வை ஏற்படுத்தும்.

இப்படத்தில் நாயகி இல்லையா?

வழக்கமான படமாக வேண்டாம் என்பதால்தான் அதை தவிர்த்தோம். முதல் படத்தை எடுக்கும் வேகத்தில் முயற்சி, அலைச்சல், உழைப்பு என்று ஓடிக்கொண்டிருக்கும் நான்கு இளைஞர்களை பிடித்து இடையிடையே காதல் செய்வதற்கு அனுப்ப தோன்றவில்லை.

விறுவிறுப்பான திரைக்கதை அதை பற்றியெல்லாம் யோசிக்க வைக்காது. இருந் தாலும், படத்தில் லஷ்மி பிரியா எதிர்மறைப் பாத்திரத்தில் நடிக்கிறார். படத்தில் நாயகி இல்லாத குறையை அந்த கதாபாத்திரம் சரிசெய்துவிடும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in