

டி.ராஜேந்தர், 'ரோமியோ ஜூலியட்' தயாரிப்பாளருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 'ரோமியோ ஜூலியட்' படத்தில் வரும் "டண்டனக்கா" பாடலை பயன்படுத்தக் கூடாது என இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஜெயம் ரவி, ஹன்சிகா நடிப்பில், புதுமுக இயக்குநர் லஷ்மண் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் 'ரோமியோ ஜூலியட்'. இப்படத்திற்காக இமான் இசையில், அனிருத் பாடியுள்ள "டண்டனக்கா" என்ற பாடல் வைரல் ஹிட் ஆகியுள்ளது. இது நடிகர் டி.ராஜேந்தரை போற்றும் விதத்தில், அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாகவே படத்தில் உள்ளது என படக்குழுவைச் சேர்ந்த பலரும் விளக்கம் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அது தன்னை இழிவுபடுத்துவதாகக் கூறி டி.ராஜேந்தர் தற்போது வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். "இந்த பாடல் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாகவே உள்ளது என படக்குழு தெரிவித்தாலும், இந்த பாடலை வைத்து பலபேர் டி.ராஜேந்தரை நையாண்டி செய்து, புதிய வீடியோக்கள், மீம்கள் என பதிவேற்றி வருகின்றனர். இது அவரை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. எனவே வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது" என டி.ராஜேந்தர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இது குறித்து ட்விட்டரில், படத்தின் நாயகன் ஜெயம் ரவி விளக்கம் அளித்திருந்தார். "இந்தப் படத்தில் டி.ஆர் அவர்களின் ரசிகனாக நான் நடிக்கிறேன். இந்தப் பாடல் அவருக்கு நாங்கள் செலுத்தும் மரியாதை. ஆனால் இதை வைத்து சிலர் உருவாக்கியுள்ள வீடியோக்கள் அவரை கிண்டல் செய்கின்றன. இது சம்பந்தப்பட்ட அனைவரையும் காயப்படுத்தியுள்ளது" என ஜெயம் ரவி கூறியிருந்தார்.
படத்தின் தயாரிப்பாளர் நந்தகோபால், இயக்குநர் லக்ஷ்மண், இசையமைப்பாளர் இமான், பாடலாசிரியர் ரோகேஷ் மற்றும் நடிகர் ஜெயம் ரவி ஆகியோருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது