

'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தில் ஏன் நடிகர் சூர்யாவால் நடிக்க முடியாமல் போனது என இயக்குநர் கெளதம் மேனன் விளக்கம் அளித்துள்ளார். அதுமட்டுமன்றி 'துருவ நட்சத்திரம்' படத்தை தற்போது விக்ரமை வைத்து இயக்க திட்டமிட்டு இருக்கிறார்.
நடிகர் சூர்யாவோடு 'காக்க காக்க', 'வாரணம் ஆயிரம்' ஆகிய படங்களில் கெளதம் மேனன் பணியாற்றியுள்ளார். இரண்டு படங்களுமே சூர்யாவிற்கு அந்தந்த கட்டத்தில் திருப்புமுனையாக அமைந்தன.
ஆனால் தொடர்ந்து 'துருவ நட்சத்திரம்' என்ற படத்தில் சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்டும், கருத்து வேறுபாடால் அதில் அவர் நடிக்க முடியாமல் போனது. தற்போது இது குறித்து இயக்குநர் கெளதம் மேனன் 'தி இந்து' ஆங்கிலத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில் பேசியுள்ளார்.
"நான் 75 சதவீத ஸ்க்ரிப்ட் பணிகளை முடித்துவிட்டு, நடிகர் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஏற்றவாறு மீதமுள்ள 25 சதவீதத்தை எழுதி முடிப்பேன். என்னிடம் கதையே இல்லை என்று இல்லை. க்ளைமேக்ஸை தவிர வேறு எதுவும் அந்த 75 சதவீத கதையில் மாறாது. நான் அந்த கதாபாத்திரங்களோடு பயணித்து அவர்களது முடிவை நிர்ணயிக்க விரும்புவேன். இது தான் சிறந்த பாணி என்று சொல்ல முடியாது. ஒருவேளை ரஜினியோடு வேலை செய்தால் இதை நான் செய்ய மாட்டேன். ஆனால் எதிர்பாராதவிதமாக அஜித் இந்த பாணிக்கு ஒப்புக்கொண்டார்.
இதை சூர்யா புரிந்து கொள்வார் என நினைத்தேன். அப்படிதான் 'காக்க காக்க', 'வாரணம் ஆயிரம்' ஆகிய படங்கள் எடுக்கப்பட்டன, அவை வெற்றியும் பெற்றன. 'துருவ நட்சத்திரம்' நவீன காலத்துக்கு ஏற்ற கதை. இதற்கு முன் நாங்கL செய்திராத வகை படம் அது. இரண்டாம் பாதி கதையை முழுவதுமாகக் கேட்டார். என்னிடம் முதல் பாதி மொத்தமும் உள்ளது, படப்பிடிப்பு ஆரம்பித்தவுடன் இரண்டாம் பாதியை கொடுப்பதாகக் கூறினேன். ஏனென்றால் அந்த பாத்திரத்தை அவர் எவ்வாறு கையாளுகிறார் என நான் பார்க்க நினைத்தேன். இதில் அவரை விட எனக்கு ரிஸ்க் அதிகமாக இருந்தது. அவர் ஏற்கனவே என்னுடன் வேலை செய்திருந்ததால் இதைப் புரிந்து கொள்வார் என நினைத்தேன்" என கெளதம் மேனன் கூறியுள்ளார்.
இந்த கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து சூர்யா ஊடகங்களிடம் பேசியது தன்னை கோபப்படுத்துவதை விட ஏமாற்றத்தையே தந்ததாக கெளதம் மேனன் கூறியுள்ளார். "எனக்கு கோபம் இருந்திருந்தால் நான் அதை உடனடியாக காமித்திருப்பேன். அவர் வழக்கமாக பேசுவதைப் போல இருக்கவில்லை அந்த அறிக்கை. அவருக்கு எந்தவிதமான அழுத்தங்கள் இருந்தது எனத் தெரியவில்லை. இது கசப்பாக முடிய வேண்டாம் என்று தான் அவரை சந்தித்து பேசினேன். கண்டிப்பாக என்னுடன் பணியாற்ற வேண்டும் என்று அவர் விரும்புவார். எனக்கும் அதில் எந்த பிரச்சினைகளும் இல்லை. ஆனால் அடுத்த முறை என்னிடம் முழு கதையும் இருக்கும் " என்று கூறியுள்ளார் கெளதம் மேனன்.
ஐங்கரன் நிறுவனத்திற்காக கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருக்கும் படம், சூர்யா மறுத்த 'துருவ நட்சத்திரம்' தான் என்பது தெளிவாகியுள்ளது.