

'கோச்சடையான்' வெளியான 3 நாட்களில், உலகம் முழுவதும் 42 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது.
மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'கோச்சடையான்'. தீபிகா படுகோன், சரத்குமார், ஆதி, ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் இப்படத்தில் ரஜினியுடன் நடித்திருக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் பொறுப்பை கே.எஸ்.ரவிக்குமார் ஏற்க, செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கி இருக்கிறார்.
நீண்ட முயற்சிக்கு பிறகு கடந்த வெள்ளிக்கிழமை இப்படம் வெளியானது. ரஜினி ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் படம் வரவேற்பை பெற்றிருக்கிறது.
இந்நிலையில் படத்தினை வெளியீட்டு இருக்கும் ஈராஸ் நிறுவனம் இன்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிக்கையில் "உலகம் முழுவதும் 3000-த்திற்கும் அதிகமான திரையரங்கில் வெளியாகி இருக்கும் 'கோச்சடையான்' திரைப்படம் 42 கோடி வசூல் செய்திருக்கிறது. இந்தியாவில் மட்டும் 30 கோடியும், இதர நாடுகளில் 12 கோடியும் வசூல் செய்திருக்கிறது" என்று கூறியிருக்கிறார்கள்.
அதுமட்டுமன்றி நேற்று ரஜினியின் நெருங்கிய நண்பரான கமல்ஹாசனுக்கு 'கோச்சடையான்' படத்தினைத் திரையிட்டு காட்டினார் இயக்குநர் செளந்தர்யா. இயக்குநர் செளந்தர்யாவின் முயற்சியை வெகுவாக பாராட்டினாராம் கமல்.