

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் படத்தில் நடிக்க வடிவேலுவை அணுகவில்லை என்று படக்குழு மறுத்திருக்கிறது.
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் 'புலி' படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருகிறது. ஸ்ரீதேவி, சுதீப், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் விஜய்யுடன் நடித்து வருகிறார்கள். விரைவில் இப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக் வெளியாக இருக்கிறது.
'புலி' படத்தைத் தொடர்ந்து, அட்லீ இயக்கவிருக்கும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் விஜய். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க இருக்கும் இப்படத்தை தாணு தயாரிக்கவிருக்கிறார்.
கடந்த சில நாட்களாக விஜய்யுடன் இப்படத்தில் வடிவேலுவும் நடிக்க இருக்கிறார் என்ற செய்திகள் வலம் வந்த வண்ணம் உள்ளன. இது குறித்து படக்குழுவிடம் கேட்ட போது, "முதலில் படத்தின் கதை மற்றும் பாத்திரத்தை வடிவேலுவிடம் விளக்கினால் தானே நடிக்கிறாரா இல்லையா என்று சொல்ல முடியும். நாங்கள் தான் வடிவேலுவை அணுகவே இல்லையா. பிறகு எப்படி நடிக்க இருக்கிறார் என்று கூற முடியும்" என்று தெரிவித்தார்கள்.
மேலும், இப்படத்தைப் பற்றி எந்தவொரு தகவலும் வெளியே கசியாமல் பார்த்து வருகிறது படக்குழு. சமந்தா மற்றும் ஏமி ஜாக்சன் இப்படத்தில் விஜய் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.