

சிம்பு, ஹன்சிகா நடித்துள்ள 'வாலு' திரைப்படத்துக்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது. இதை சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் விஜய் சந்தர் 'வாலு' திரைப்படத்தை இயக்கியுள்ளார். சிம்பு, ஹன்சிகா, சந்தானம், விடிவி கணேஷ், பிரம்மானந்தம், 'ஆடுகளம்' நரேன், மந்த்ரா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வாலு'. நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி இப்படத்தைத் தயாரித்துள்ளார். ஷக்தி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களாக 'வாலு' படத்தின் ரிலீஸ் தள்ளிக்கொண்டே போனது. இறுதியாக சிம்புவின் பிறந்தநாளான பிப்ரவரி 3-ல் வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால், படம் வெளியாகவில்லை. மார்ச் 27-ல் 'வாலு' படம் ரிலீஸ் ஆகும் என்று விஜய் சந்தர் தன் ட்விட்டர் பக்கத்தில் ஏற்கெனவே அறிவித்தார்.
இந்நிலையில், இன்று தணிக்கைக் குழுவினருக்கு 'வாலு' திரைப்படம் காண்பிக்கப்பட்டது. படத்தைப் பார்த்த தணிக்கைத் துறையினர் எந்த வெட்டுதலும் இல்லாமல், யு சான்றிதழ் கொடுத்துள்ளனர்.
'வாலு' திரைப்படம் இன்று சென்சார் ஆவதை முன்கூட்டியே அறிந்துகொண்ட சிம்பு ரசிகர்கள் #VaaluCensorDay என்ற ஹேஷ்டேக் உருவாக்க, அது சென்னையில் ட்ரெண்ட் ஆனது.
'' 'வாலு' திரைப்படத்துக்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது. நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறோம். ரசிகர்களின் அன்புக்கு சிறப்பு நன்றி'' என்று சிம்பு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மார்ச் 27-ல் 'வாலு' திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று வருடங்களுக்குப் பிறகு சிம்பு நடிப்பில் வெளிவரும் படம் என்பதால் 'வாலு' படத்துக்கு கணிசமான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடித்த 'இது நம்ம ஆளு படம்' ரிலீஸ் ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.