

'த்ரிஷ்யம்' படத்தின் வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டதால், விரைவில் 'பாபநாசம்' இசை மற்றும் படம் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோகன்லால், மீனா உள்ளிட்ட பலர் நடிக்க ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான மலையாள படம் 'த்ரிஷ்யம்'. விமர்சகர்கள் மத்தியிலும், வசூலிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என அனைத்து மொழி ரீமேக் உரிமையையும் ராஜ்குமார் தியேட்டர்ஸ் நிறுவனம் பெற்றது.
தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் ரீமேக்காகி விட்டது. தமிழில் கமல், கெளதமி, சார்லி, கலாபவன் மணி உள்ளிட்ட பலர் நடிக்க ஜீத்து ஜோசப் இயக்கி வந்தார். 'பாபநாசம்' என பெயரிடப்பட்ட இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார்.
சில மாதங்களுக்கு முன்பு முன்பு சதிஷ் பால் என்பவர், "பாபநாசம்(த்ரிஷ்யம்)" படத்தின் கதை தான் எழுதிய "ஒரு மழகாலத்" என்னும் நாவலில் உள்ள கதையை ஒத்திருக்கிறது. 'த்ரிஷ்யம்' படத்தின் தயாரிப்பாளர்கள் தனது அனுமதியில்லாமல் திரைப்படமாக்கிவிட்டார்கள். எனவே 'பாபநாசம்' படப்பிடிப்பை நிறுத்தக் கோரி எர்ணாகுளம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, 'பாபநாசம்' படப்பிடிப்புக்கு இடைக்காலத் தடை பெற்றிருந்தார். அந்த மனுவின் மீது மேல்முறையீடு செய்த தயாரிப்பாளர் தரப்பு, தற்காலிகமாக இடப்பட்ட தடையை நீக்கி படப்பிடிப்பைத் தொடர்ந்தனர்.
இந்நிலையில், எர்ணாகுளம் 2வது கூடுதல் நீதிமன்ற அமர்விற்கு வந்த இவ்வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இவ்வழக்கினை தள்ளுபடி செய்து தீர்ப்பு அளித்தார். இதனால் 'பாபநாசம்' படத்துக்கான தடை முற்றிலுமாக நீங்கியுள்ளது.
'பாபநாசம்' படத்தின் இசை மற்றும் பட வெளீயீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்பட இருப்பதாக தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.