

தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை கடந்த பத்து நாட்களாக விஜய் - அமலா பால் திருமணம் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இச்செய்தி குறித்து அமலா பால் பல்வேறு பேட்டிகள் கொடுத்து வந்தாலும், இயக்குநர் விஜய், அமலா பாலுடனான திருமணம் குறித்து எந்த ஒரு கருத்தையும் கூறவில்லை.
இந்நிலையில், விஜய் - அமலா பால் திருமணம் ஜுன் 12ம் தேதி நடைபெற இருப்பதாகவும், திருமண நிச்சயதார்த்தம் கேரளாவில் நடைபெற இருப்பதாகவும் செய்திகள் பரவின.
முதன் முறையாக அமலா பாலுடனான காதல் குறித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருக்கிறார் இயக்குநர் விஜய். அந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பது, "ஒருவராக இருந்து இருவராக மாற உள்ள எனது நிலையைப் பற்றி சொல்வதற்கு இதை ஒரு சிறந்த சந்தர்ப்பமாகக் கருதுகிறேன். எனது வாழ்க்கைத் துணையை தேடியது முடிவடைந்து, எனது மனம் கவர்ந்த காதலை அமலாவிடம் கண்டேன்.
அவர் ஒரு நல்ல மனம் கொண்டவர் என்பது எனக்குத் தெரியும். அவர் உண்மையாகவே ஒரு பொக்கிஷம். அதை கண்ணும் கருத்துமாக காதலுடன் பாதுகாப்பேன்.
எங்களது திருமண திட்டத்தை கண்ணியமாகவும், முறையாகவும் நாங்களே அறிவிக்க வேண்டும் என்று இருந்தோம். ஆனால், எங்களுக்குத் தெரியாமலே அந்த செய்தி வெளியில் வந்து விட்டது.
மீடியாக்களிடமிமும், நண்பர்களிடமும், எங்களுக்கு வேண்டப்பட்டவர்களிடமும் எங்களது திருமண திட்டத்தைப் பற்றி நாங்கள் மூடி மறைக்க வேண்டும் என்று நினைத்ததேயில்லை.
மீடியாக்களையும், நண்பர்களையும் தனிப்பட்ட அழைப்புடன் எங்களது மரியாதையை வெளிப்படுத்தும் விதத்தில் சந்திப்போம்.
அமலா பால் சில பொறுப்புகளை முடிக்க வேண்டும், நானும் எனது மனதுக்கு நெருக்கமான ‘சைவம்’ படத்தின் வெளியீட்டை விரைவில் எதிர்நோக்கியுள்ளேன்.
அதன் பின்தான் எங்களது வாழ்க்கையின் மிக முக்கியமான கொண்டாட்டத்திற்கு நேரம் ஒதுக்க முடியும். அதுவரை என்றென்றும் உங்களது வாழ்த்துகளையும், ஆசீர்வாதங்களையும், ஆதரவையும் வேண்டுகிறோம்” என்று கூறியிருக்கிறார்.