

தியாகு நேரில் வந்து மன்னிப்புக் கோரியதைத் தொடர்ந்து கவிஞர் தாமரை தனது போரட்டத்தை கைவிட்டு வீடு திரும்பியுள்ளார்.
நவம்பர் மாதம் 23ம் தேதி கணவர் தியாகு வீட்டை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து கவிஞர் தாமரை பிப்ரவரி 27ம் தேதி முதல் தியாகுவின் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
என்னுடைய போராட்டத்தை கைவிட வேண்டும் என்றால் கணவர் தியாகு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கவிஞர் தாமரை தெரிவித்தார்.
இந்நிலையில் நேற்றிரவு 9 மணியளவில், வள்ளுவர் கோட்டம் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தாமரையிடல் மன்னிப்பு தியாகு வந்தார். தனது மனைவி தாமரை மற்றும் மகன் சமரனிடமும் மன்னிப்புக்கோரி கடிதம் ஒன்றை கையோடு எழுதிக் கொண்டு வந்திருந்தார்.
அக்கடிதத்தில் தியாகு கூறியிருப்பதாவது, "ஓவியர் வீர.சந்தானம், வழக்கறிஞர் அருள்மொழி ஆகியோருக்கு 3ம் தேதியும், இன்று காலையும் எழுதிய கடிதத்தின் தொடர்ச்சியாக இந்த கடிதத்தை எழுதுகிறேன். நீங்கள் கோரியிருந்தபடி நடுநிலையான விசாரணை குழு அமைக்கும் பொறுப்பை ஓவியரும், வழக்கறிஞரும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
சென்ற நவம்பர் 23ம் தேதி நான் வீட்டை விட்டு வெளியேறியதற்கு அடிப்படையாகவும், உடனடியாகவும் அழுத்தமான காரணங்கள் இருப்பினும் அந்த வெளிநகர்வினாலும் அடுத்து வந்த 3 மாத கால பிரிவினாலும் அனைத்துக்கும் உச்சமாக கடந்த 7 நாள் தர்ணா போராட்டத்தாலும் உங்களுக்கும் சமரனுக்கும் ஏற்பட்டுள்ள உடல் துன்பத்துக்காகவும், மன வேதனைக்காவும் உளமார வருந்துகிறேன். நான் இவ்வாறு வருத்தம் தெரிவித்திருப்பதை ஏற்று உங்கள் போராட்டத்தை கைவிட்டு இல்லம் திரும்ப வேண்டுகிறேன்." என்று கடிதத்தை பத்திரிகையாளர்கள் மத்தியில் படித்துக் காட்டிவிட்டு கேட்கப்பட்ட எந்தொரு கேள்விக்கும் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
அதனைத் தொடர்ந்து கவிஞர் தாமரை பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசியது, "இது ஒரு முழுமையான தீர்வு கிடையாது. நேரில் வந்தவர் கடிதம் மூலம் மன்னிப்பு கூறி உள்ளார். இது ஒரு அரசியல் நிகழ்வு போலவே உள்ளது. நீதிமன்ற தீர்வுக்கு நான் ஒருபோது போவதில்லை. விவாகரத்து எளிதான தீர்வு. அதை நான் ஏற்கவில்லை. அவரை அசிங்கப்படுத்தவோ, அவமானப்படுத்தவோ தர்ணா போராட்டத்தில் ஈடுபடவில்லை. இதுவரை நான் அவரை பற்றி எதுவும் கூறவில்லை.
இனி விசாரணை குழுவினர் விசாரித்து பிரச்சினைக்கு தீர்வு காணட்டும். அதில் உண்மையிலேயே என் மீது தவறு உள்ளதா? அவர் மீது தவறு உள்ளதா? என்பதை கண்ட பிறகுதான் முழுமையான முடிவு எடுப்பேன்." என்று கூறினார்.