

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வட அமெரிக்காவில் இசைச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். இந்த இசை நிகழ்ச்சிகள் மார்ச் 21-ஆம் தேதி துவங்கி அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடைபெறவுள்ளது.
இந்த இசை நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட்டுகள் மார்ச் 6-ஆம் தேதி முதலும், விஐபி டிக்கெட்டுகள் மார்ச் 4-ஆம் தேதி முதலும் விற்கப்படுகின்றன.
இந்த பயணத்தைக் குறித்து பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், "வட அமெரிக்காவில் மீண்டும் இசை நிகழ்ச்சி நடத்த வேண்டும் என நீண்ட நாட்களாக நினைத்திருந்தேன். இந்த பயணத்தை ஆவலாக எதிர்நோக்குகிறேன். இது அற்புதமான நிகழ்ச்சியாக இருக்கும் என்பதை நன்றியோடு உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்" என்றார்.
இதற்கு முன் 2010-ஆம் ஆண்டு, ரஹ்மான் அமெரிக்காவில் இசை நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்.
48 வயதான ரஹ்மான் ஆஸ்கர் வென்றதைத் தொடர்ந்து பல ஹாலிவுட் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். தற்போது நட்சத்திர கால்பந்து வீரர் பீலேவைப் பற்றிய வரலாற்றுப் படமான 'பீலே'வுக்கு இசையமைத்து வருகிறார்.
முன்னதாக பிப்ரவரி 25 அன்று, ரஹ்மானைப் பற்றிய 'ஜெய் ஹோ' என்ற ஆவணப் படம் நியூயார்க்கில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.