

மார்ச் 27-ம் தேதி அன்று சிம்பு நடித்த 'வாலு' திரைப்படமும், கார்த்தி நடித்த 'கொம்பன்' திரைப்படமும் வெளியாகவுள்ளது.
அறிமுக இயக்குநர் விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'வாலு'. சிம்பு, ஹன்சிகா, சந்தானம்,விடிவி கணேஷ் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். 'வாலு' படத்தை நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி தயாரித்துள்ளார். தமன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
2012 தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட 'வாலு' திரைப்படம் பல்வேறு கால தாமதங்களுக்குப் பிறகு மார்ச் 27 அன்று ரிலீஸ் ஆவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், 'குட்டிப்புலி' இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, லட்சுமி மேனன், ராஜ்கிரண், கோவை சரளா நடித்த 'கொம்பன்' திரைப்படம் மார்ச் 27 அன்று ரிலீஸ் ஆகிறது.
ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள 'கொம்பன்' திரைப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஏப்ரல் 2-ல்தான் 'கொம்பன்' ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கமலின் 'உத்தம வில்லன்', உதயநிதியின் 'நண்பேன்டா' படங்கள் ஏப்ரல் 2-ல் ரிலீஸ் ஆவதால் 'கொம்பன்' திரைப்படத்தை மார்ச் 27-ல் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.
மார்ச் 5-ல் 'கொம்பன்' இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.