

விஜய்க்காக படம் பண்ணுங்கள் என்று கூறியபோது, 'அனேகன்' கதையை விஜய்யை மனதில் வைத்தே உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் கே.வி.ஆனந்த்.
தனுஷ், அமைரா, கார்த்திக் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'அனேகன்'. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் படத்தை கே.வி.ஆனந்த் இயக்கி இருக்கிறார். பிப்ரவரி 13-ம் தேதி இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது.
'மாற்றான்' படத்தை முடித்தவுடன், விஜய்யின் கால்ஷீட் இருக்கிறது அவருக்காக கதை பண்ணுங்கள் என்று தெரிவித்திருக்கிறார்கள். கதையை முழுமையாக முடிந்தவுடன் கதையைச் சொல்லும் பழக்கமுள்ள கே.வி.ஆனந்த் 'அனேகன்' கதையினை விஜய்யை மனதில் வைத்தே எழுதியிருக்கிறார்.
முழுக்கதையை முடித்துவிட்டு, விஜய்யை சந்தித்து கூறியவுடன் "சூப்பரா இருக்கு. நல்ல காதல் கதை" என்று கூறியிருக்கிறார். ஆனால் நான் 'ஜில்லா', 'கத்தி' என கால்ஷீட் தேதிகள் ஒதுக்கிவிட்டேன். உங்களுக்கு எத்தனை நாள் தேவைப்படும் என்றவுடன் 120 நாட்கள் ஆகலாம் என்று தெரிவித்திருக்கிறார் கே.வி.ஆனந்த்.
அடுத்த நாள் போன் செய்த விஜய், இரண்டு படக்குழுவிடம் பேசிவிட்டேன். என்னால் அட்ஜஸ்ட் பண்ணி 65 நாள் ஒதுக்க முடியும், அதற்குள் உங்களால் படத்தை முடிக்க முடியுமா என்று விஜய் கேட்டிருக்கிறார். முடிக்க வாய்ப்பு மிகவும் கம்மி என்று கே.வி.ஆனந்த் கூறியிருக்கிறார். சரி... நாம் இருவரும் விரைவில் இணைந்து பணியாற்றலாம் என்று கை குலுக்கி விட்டு அனுப்பி விட்டாராம் விஜய்.
அதனைத் தொடர்ந்தே தனுஷை சந்தித்து கே.வி.ஆனந்த் கதையை தெரிவித்து 'அனேகன்' உருவாகி இருக்கிறது. விஜய்க்கு மிகவும் பிடித்த கதை என்றவுடன், தனுஷும் மிகுந்த ஈடுபாட்டுடன் நடித்துக் கொடுத்திருக்கிறார்.