

ஒரு பக்கம் ‘கிட்ணா’ படத்தின் இயக்கம், மறுபக்கம் ‘மாஸ்’, ‘ரஜினி முருகன்’ படங்களில் வில்லன் வேடம் என்று பரபரப்பாக இருக்கிறார் இயக்குநர் சமுத்திரக்கனி. இந்த பரபரப்புக்கு நடுவில் ஒரு மாலைப் பொழுதில் அவரைச் சந்தித்தோம்.
‘கிட்ணா’ எந்த மாதிரியான படம்?
சு.தமிழ்ச்செல்வியின் ‘கீதாரி’ நாவலைத் தழுவி எடுக்கப்படும் படம் ‘கிட்ணா’. இந்தப் படத்தில் 50 ஆண்டுகால வாழ்க்கையைப் பதிவு செய்கிறேன். இதைப் படம் பிடிப்பதற்காக ஐந்து இடங்களைத் தேர்வு செய்திருக்கோம். இந்தப் படத்தை இயக்குவதுடன் அதன் நாயகனாகவும் நான் நடிக்கிறேன்.
தன்ஷிகா 18 முதல் 48 வயசு வரை 5 வகையான தோற்றங்களில் நடிக்கிறார். மஹிமா இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இவர்களைத் தவிர மூன்று முக்கியமான ஆண் கதாபாத்திரங்களும் இப்படத்தில் உள்ளன. ‘கிட்ணா’வில் நடிக்கும் அனைவருக்கும் இப்படம் நல்லபெயரை வாங்கித் தரும் என்று நம்புகிறேன்.
பொதுவாக நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவது இல்லையே?
அப்படிச் சொல்லமுடியாது. வெற்றி மாறன் இயக்கும் ‘விசாரணை’யும் நாவலைத் தழுவி எடுக்கப்படும் படம்தான். எதையும் சரியாகச் செய்தால் அது ஒரு பெரிய தாக்கத்தை உண்டாக்கும்.
நடிப்பு, இயக்கம் என்று உங்களால் எப்படி ஒரே நேரத்தில் இரட்டை குதிரைகளில் சவாரி செய்ய முடிகிறது?
இரண்டு குதிரைகள் எல்லாம் இல்லை. இயக்கும் நேரத்தில் நடிப்பதில்லை. நடிக்கப் போய்விட்டால் இயக்கும் வேலை களைத் தள்ளிவைத்து விடுகிறேன்.
சமீபகாலமாக என் நண்பர்கள் நடிக்கச் சொன்னதால் அதில் அதிக கவனம் செலுத்தினேன். மீண்டும் முழு மூச்சில் படங்களை இயக்கத் தொடங்குவேன். இரண்டு வேலைகளையும் நான் மகிழ்ச்சி யாகத்தான் செய்கிறேன்.
‘ரஜினி முருகன்’, ‘மாஸ்’ என்று மீண்டும் வில்லனாக நடிக்கிறீர்களே?
சகோதரர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் ‘ரஜினி முருகன்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. காமெடிப் படமான இதில் நடிப்பது எனக்கு நல்ல அனுபவத்தைக் கொடுத்துள்ளது. சூர்யாவுடன் இணைந்து ‘மாஸ்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பை சகோதரர் வெங்கட்பிரபு கொடுத்தார்.
‘சுப்பிரமணியபுரம்’ படத்துக்குப் பிறகு நான் வில்லனாக நடிக்கவில்லை. ஆனால், இந்த இரண்டு படங்களிலும் வில்லனுக்கு நிறைய நடிக்க வாய்ப்புள்ள பாத்திரம் என்பதால் நடிக்கிறேன்.
உங்கள் முதல் பட ஹீரோ வெங்கட்பிரபு. தற்போது அவர் இயக்கும் படத்தில் நீங்கள் வில்லன். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
இதற்கு காலச்சுழற்சிதான் காரணம். வெங்கட்பிரபு அற்புதமான தம்பி. அவன் வாழ்க்கையில் இந்த அளவு முன்னேறியதற்கு அவனுடைய உழைப்புதான் காரணம். அவனுக்கு யாரும் பெரிதாக உதவி செய்யவில்லை. அவனாக உழைத்து இந்த இடத்துக்கு வந்திருக்கிறான். அவன் இயக்கத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
உங்கள் குருநாதர் கே.பாலசந்தர் நினைவாக தமிழ் சினிமாவுக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?
அவருடைய மறைவு எனக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவர் இல்லாமல் 50 நாட்களைக் கடந்ததே மிகப் பெரிய வலியாக இருக்கிறது. என் மனம் கஷ்டப்படும்போதும், உற்சாகம் குறையும் காலகட்டங்களிலும் நான் அவரைப் போய்ப் பார்ப்பேன். ‘என்னய்யா பேட்டரி சார்ஜ் குறைஞ்சிடுச்சா’ என்று கேட்பார்.
நான் அவரைத் தேடிப் போனாலே, எனக்குள்ளே ஏதோ தடுமாற்றம் இருக்கிறது. முடிவெடுக்க முடியாமல் இருக்கிறேன் என்பதை புரிந்துகொள்வார்.
இனி, அப்படி எங்கே போவதென்று தெரியவில்லை. தாயாக, தந்தையாக, குருவாக, சகோதரராக, நண்பராக இந்த உலகத்தில் இருக்கும் எல்லா உறவுமாக எனக்கு என் இயக்குநர் இருந்திருக்கிறார். அவரது பிரிவு மிகப் பெரிய வலி.
அவர் கடைசியாக ஒரு கதை எழுதினார். திரைக்கதை, வசனத்தோடு எழுதி வைத்திருந்ததை என்னிடம் படிக்கக் கொடுத்தார். ‘நீதான் முதல்ல படிக்கற. படிச்சுப் பார்த்து சொல்லு’ என்றார். அந்தக் கதையைப் படமாக எடுக்க வேண்டுமென்று அவருக்கு ஆசை. அதை நான் கண்டிப்பாக எடுப்பேன்.
மீண்டும் சசிகுமாருடன் இணைவதாக சொல்லப்பட்டதே?
அதற்கு காலம்தான் பதில் சொல்லும். கால ஓட்டத்தில் எல்லாரும் ஓடிக் கொண்டே இருக்கிறோம். சசி இப்போது பாலா அண்ணன் படத்தில் பிஸியாக இருக்கிறார். நான் நடிப்பு, இயக்கம் என்று பரபரப்பாக இருக்கிறேன். நாங் கள் இருவரும் மீண்டும் ஒரு புள்ளியில் சந்திக்கும்போது அது நடக்கும்.
விஜய்க்கு ஒரு வரிக் கதை சொல்லி ஓகே வாங்கியதாக சொல்லப்பட்டதே?
இல்லை. விஜய்யை நான் இன்னும் சந்திக்கவில்லை. விஜய்யை சந்திப்பதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
சினிமாவுக்கு வரும் இளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
விடாமுயற்சியோடு இருங்கள்.நமக்கான வெற்றி பக்கத்திலேயே இருக்கும். நாம் சிலசமயம் அதற்கு ஓரடி அருகில் வரை போய்விட்டு திரும்பி வந்துவிடுவோம். அடுத்த அடி எடுத்து வைத்திருந்தாலே வெற்றி கிடைத்திருக்கும். அதனால் பின்வாங்காமல் விடாமுயற்சியோடு இருந்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.