இன்று பாலுமகேந்திரா முதலாம் ஆண்டு நினைவு நாள்: நீதான் என்றும் என் சந்நிதி - இயக்குநர் பாலா
அன்பான அப்பா..
தங்கள் படங்களில் நடித்த நடிகர் நடிகைகளை எந்த ஒப்பனையுமின்றி தத்ரூபமாக அழகாகக் காட்டினீர்கள் என்பது உலகறிந்த விஷயமே...
நடிக்க வாய்ப்புத் தேடி வருபவர்கள் கூட தங்கள் கையால் ஒரு புகைப்படம் மட்டுமாவது எடுத்துக்கொள்ள முடியாதா? என்று ஏங்கி எத்தனையோ பேர் அலைந்து கொண்டிருந்தபோது அவர்களையெல்லாம் நீங்கள் புறந்தள்ளிவிட்டு தினமும் இரண்டு மூன்று அன்னையர்களாவது தங்கள் மகள்களை அழைத்துவந்து புகைப்படம் எடுக்கச்சொல்லிக் கேட்டால், அவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்து அந்தப் பெண்களை வெவ்வேறு கோணங்களில் படம் பிடித்து, நீங்களே நேரில் சென்று பிரதி எடுத்து தினமும் அவர்களுக்கு கொடுத்துக் கொண்டே இருந்தீர்கள்.
அப்போதெல்லாம் “எதுக்கு இவருக்கு இந்த வேண்டாத வேலை” என்று நினைத்து நான் சலிப்படைந்ததுண்டு.
ஆனால் சில வருடங்களுக்குப் பிறகுதான் உங்களின் இந்த செயல்பாடுகளின் ‘புனிதம்’ என்னவென்று எனக்குப் புரிந்தது.
தங்களிடம் புகைப்படம் எடுத்துக்கொண்ட பெண்கள் எல்லோரும் திருமணத்துக்காக ஏங்கிக் காத்திருக்கும் முதிர்கன்னிகள் என்றும், தாங்கள் அவர்களை புகைப்படம் எடுத்துக் கொடுத்தால் தன் மகள்கள் அழகாக இருப்பார்கள், அதை மாப்பிள்ளை வீட்டார்களுக்கு அனுப்பிவைத்தால் நல்ல வரன் கிடைக்குமே என்று பரிதவித்து அந்தப் பெண்களின் ஏழைத்தாய்கள் தங்களை நாடி வந்திருக்கிறார்கள் என்ற உண்மையை கால தாமதமாகப் புரிந்துகொண்டபோது நான் தங்களிடம் சாஷ்டாங்கமாக காலில் விழுந்து சரணாகதி அடைந்திருக்க வேண்டும்.அதை ஏன் நான் அப்போது செய்யவில்லை என்ற குற்ற உணர்வு இப்போதும் என் மனதை வதைத்துக்கொண்டிருக்கிறது. மன்னித்து ஆசீர்வதியுங்கள்.
எனக்கென்று ஒரு மகள் பிறந்த இரண்டே மணி நேரத்தில் கேமராவுடன் பார்க்க வந்து படம் எடுத்த போது கலங்கியிருந்த உங்கள் கண்களின் மூலமாக உங்களுக்கு ஒரு பெண் குழந்தை இல்லையென்ற ஏக்கத்தை உங்கள் கண்ணீரின் மூலமாக முதல்முறையாக அறிய முடிந்தது.
அதேபோன்று கலங்கிய கண்களை உங்கள் மரணத் தருவாயில் பார்த்தேன். உங்கள் உயிர்நாடி இன்னும் முப்பது நிமிடங்களில் நிற்கப்போகிறது என்பதை அறியாத நீங்கள் என்னிடம் கடைசியாகச் சொன்ன வார்த்தை நினைவிருக்கிறதா?
‘என் உடம்புக்கு ஒண்ணும் இல்லடா.. என் கண்ணுலதான் அடிபட்டிருச்சு.. முதல்ல உடனே அதை சரிபண்ணச்சொல்லு.. ஏன்னா அது ஒண்ணுதான் என்னோட சொத்து...’
கடைசியாக இந்த வார்த்தையை மட்டும் சொல்லிமுடித்துவிட்டு எங்கே போனீர்கள்?
நினைத்துப் பார்த்தால் ஆயிரம் சம்பவங்கள் மனதில் ஓடுகின்றன. கண்ணதாசன் கடைசியாக எழுதிய பாடல் உங்களுக்கானது.
‘உனக்கே உயிரானேன்
எந்நாளும் எனை நீ மறவாதே!
நீயில்லாமல் எது நிம்மதி?
நீதான் என்றும் என் சந்நிதி.’
காலன் சில வருடங்கள் தங்களுக்கு அவகாசம் அளித்திருக்கலாம்.
எங்களுக்காகவும்…
இன்னும் திருமணமாகாத
பல முதிர்கன்னிகளுக்காகவும்…
இல்லாத இறைவனை நான் சபிக்கிறேன்.
