

செல்வராகவன் இயக்கும் புதிய படத்தில் சிம்பு நடிக்க இருக்கிறார். இதை தனுஷ் தன் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
'இரண்டாம் உலகம்' தோல்விக்குப் பிறகு இயக்குநர் செல்வராகவன் ஒரு காதல் கதையைப் படமாக்கத் திட்டமிட்டார். இதில் சிம்புவும், த்ரிஷாவும் நடிக்க ஒப்பந்தம் ஆனார்கள். இப்படத்துக்கு அலைவரிசை என்று டைட்டில் வைத்தனர். ரேடியன்ஸ் மீடியா சார்பில் வருண் மணியன் தயாரிக்கும் இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பதாக சொல்லப்பட்டது.
'அலை', 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்திற்கு பிறகு சிம்புவும், த்ரிஷாவும் இணையும் மூன்றாவது படம் , சிம்புவும், இயக்குநர் செல்வராகவனும் இணையும் முதல் படம், செல்வா மீண்டும் யுவனுடன் கூட்டணி என ரசிகர்களைக் கவரும் நிறைய விஷயங்கள் இருப்பதால் படத்தைப் பற்றிய பெரிய எதிர்பார்ப்பு உருவாகியது. கடந்த ஆண்டு ஏப்ரல் இறுதியில் ஷூட்டிங் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், எந்தக் காரணமும் சொல்லப்படாமலேயே படம் கைவிடப்பட்டது.
இந்நிலையில், ''அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தம்பி சிம்பு நடிக்க இருக்கிறார். இந்தப் படம் மிக சிறப்பானதாக அமையும். சகோதரர்களுக்கு வாழ்த்துகள்.'' என்று தனுஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
ஹீரோயின், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் யார் என்பதை இன்னும் அறிவிக்கவில்லை. ஏற்கெனவே ஒப்பந்தம் ஆன த்ரிஷாவும், யுவனும் படத்தில் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செல்வராகவன் - சிம்பு இணையும் படம் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.