மார்ச் 6-ல் வெளியாகிறது எனக்குள் ஒருவன்
பெரும் வரவேற்பைப் பெற்ற 'லுசியா' படத்தின் தமிழ் ரீமேக்கான 'எனக்குள் ஒருவன்' மார்ச் 6-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னடத் திரையுலகில் பவன் குமார் இயக்கத்தில் வெளியான 'லுசியா' இந்தியளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் ரீமேக் உரிமைக்கு கடும் போட்டிக்கு இடையே சி.வி.குமார் கைப்பற்றினார்.
பிரசாத் ராமர் இயக்கத்தில் சித்தார்த், தீபா சன்னதி, சிருஷ்டி உள்ளிட்ட பலர் நடிக்க தமிழில் ரீமேக்கானது 'லுசியா'. 'எனக்குள் ஒருவன்' எனப் பெயரிடப்பட்ட இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கிறார். சி.வி.குமார், அபினேஷ் இளங்கோவன், சசிகாந்த் ஆகியோர் இணைந்து தயாரிக்க, வருண் மணியனின் ரேடியன்ஸ் மீடியா நிறுவனம் வெளியிட இருக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பல நாட்கள் ஆன நிலையில், விரைவில் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகிக் கொண்டே இருந்தது. இந்நிலையில் இன்று இப்படம் மார்ச் 6-ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள்.
'எனக்குள் ஒருவன்' பாடல்கள் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்திருப்பதால், படத்திற்கு நல்ல ஒப்பனிங் இருக்கும் என நம்புகிறது படக்குழு.
