

'என்னை அறிந்தால்' படத்தில் தன்னுடன் நடித்த நாயகி பார்வதி நாயரின் நடிப்பைப் பாராட்டி அஜித், அவருக்கு ஆளுயரப் புகைப்படம் ஒன்றை பரிசாக அளித்திருக்கிறார்.
அந்தப் பரிசு குறித்து சிலாகித்துப் பேசிய பார்வதி"அஜித் மிகச் சிறந்த புகைப்படக் கலைஞர். அவருக்கு ஷூட்டிங் இடைவேளைகளில் புகைப்படம் எடுக்கப் பிடிக்கும். நான் எதிர்பாராத ஒரு சமயத்தில் எனக்கே தெரியாமல் என்னை புகைப்படம் எடுத்திருக்கிறார். பின் அதைக் கருப்பு - வெள்ளைப் புகைப்படமாகப் பிரதியெடுத்து, ஃபிரேம் மாட்டி எனக்குப் பரிசாக அளித்தார். என்னுடைய வேலைக்கான பாராட்டு அது என்று நினைக்கிறேன்" என்றார்.
அந்தப் புகைப்படத்தைத் தன் வீட்டின் சுவரில் மாட்டி வைத்து பொக்கிஷமாய்ப் பாதுகாக்கிறார் பார்வதி.
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் ஆக்ஷன் - திரில்லர் வகைப் படமான 'என்னை அறிந்தால்' வரும் வியாழக்கிழமை வெளியாகிறது.
இது குறித்துப் பேசிய பார்வதி, "இப்படம்தான், இதுநாள் வரை நான் பணியாற்றிய படங்களிலேயே மிகவும் நெருக்கமாக உணர்ந்த படம். செட்டில் எல்லோரும் ஒரு குடும்பத்தைப் போல இருந்தோம். ஒவ்வொரு நாள் படப்பிடிப்பும் என்னைப் பரவசப்படுத்தியது.
ஷூட்டிங்கின் கடைசி நாளன்று, அங்கிருந்து கிளம்பவே மனதில்லை. படப்பிடிப்பு சூழல் மிகவும் அமைதியாகவும் அதே நேரம் வேடிக்கையாகவும் இருந்தது" என்றார்.
பார்வதியின் திரையுலக வாழ்க்கையில் இது முக்கியமான படமாக இருக்குமாம். இந்தப் படத்திற்காக அவர் அழைக்கப்பட்டபோது, அவரின் கதாபாத்திரம் குறித்த எந்தவொரு தகவலும் தெரியாமலேயே இருந்த பார்வதி, கௌதம் மேனன் மேல் இருந்த நம்பிக்கையால் நடிக்க சம்மதித்திருக்கிறார்.
"கெளதம் வாசுதேவ் மேனனின் படங்களில் இருக்கும் பெண் கதாபாத்திரங்கள் எவ்வளவு வலிமையாகவும், அழகாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கும் என்பதை அறிந்தவள்நான். அதனால்தான் இந்தப் படத்தில் நடிப்பது குறித்த இரண்டாவது அபிப்ராயமே எனக்கு ஏற்படவில்லை" என்றார்.
உத்தமவில்லனில் கமல்ஹாசனோடு நடித்திருக்கும் பார்வதி அதன் வெளியீட்டிற்காகவும் ஆவலோடு காத்திருக்கிறார்.