

மணிரத்னம் இயக்கிவரும் 'ஒகே கண்மணி' படத்தின் பெயரை 'ஓ காதல் கண்மணி' என்று மாற்றியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ், கனிகா உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் தயாராகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருக்கும் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். மணிரத்னத்தின மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
முதலில் இப்படத்திற்கு 'ஒகே கண்மணி' என்று தலைப்பிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், தலைப்பில் ஆங்கில வார்த்தை இருப்பதால் வரிச்சலுகை கிடைக்காது என்ற காரணத்தால் தற்போது 'ஓ காதல் கண்மணி' என்று பெயரை மாற்றி இருக்கிறாராம்.
படப்பிடிப்பு தொடங்கி இறுதிகட்டப் பணிகள் நடந்து வரும் இதுவரை இப்படம் குறித்து எந்தொரு அறிக்கையும் படக்குழு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரலில் வெளியாக இருக்கும் இப்படத்தைத் தொடர்ந்து, தனுஷ் நடிக்கவிருக்கும் இந்தி படத்தை இயக்க திட்டமிட்டு இருக்கிறார் இயக்குநர் மணிரத்னம்.