

‘மான் கராத்தே’ படத்துக்கு வழங்கப்பட்ட கேளிக்கை வரிச் சலுகையை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வழக்கறிஞர் ஐ. ஜெயசீலன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
‘தமிழில் பெயர் சூட்டப்படும் திரைப்படங்களுக்குத் தமிழக அரசு கேளிக்கை வரிச் சலுகையை அளித்து வருகிறது. இந்நிலையில் அண்மையில் வெளியான ‘மான் கராத்தே’ என்ற திரைப்படத்துக்கும் தமிழக அரசு கேளிக்கை வரிச் சலுகை அளித்துள்ளது. ‘மான் கராத்தே’ என்ற பெயர் தமிழ் பெயர் அல்ல. மேலும் அந்தப் படத்தில் ஆங்கில பாடலும் மதுபானம் உட்கொள்வதை ஊக்குவிக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. ஆகவே இப்படத்துக்கு கேளிக்கை வரிச் சலுகை அளிக்கப்பட்டது விதிமுறைகளுக்கு மாறானதாகும். எனவே ‘மான் கராத்தே’ படத்துக்கு அளிக்கப்பட்ட கேளிக்கை வரிச் சலுகையை ரத்து செய்யும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும்
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு தற்காலிக தலைமை நீதிபதி சதீஷ் கே. அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் கொண்ட முதன்மை அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ‘மான் கராத்தே’ படத்துக்கான கேளிக்கை வரிச் சலுகையை ரத்து செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.டி. பெருமாள் வாதிட்டார். இதனையடுத்து இந்த மனுதொடர்பாக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை இம்மாதம் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.