

சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் ‘காக்கி சட்டை’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கிறார் இயக்குநர் துரை. செந்தில்குமார். ஒரு மாலைப் பொழுதில் அவரைச் சந்தித்தோம்.
‘காக்கி சட்டை’ காமெடிப் படமா? ஆக்ஷன் படமா?
இரண்டுமே கிடையாது. இது வேறு மாதிரியான படம். இந்தப் படத்தைப் பார்க்கும்போது உங்களுக்கே இது புரியும். இந்த படம் கண்டிப்பாக சிவகார்த்திகேயனை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லும்.
‘எதிர் நீச்சல்’ படத்தில் பணியாற்றிய அதே குழு மீண்டும் எப்படி இணைந்தது?
‘எதிர்நீச்சல்’ படம் வெளியான அன்று அனைவரும் தனுஷ் சாரின் வீட்டில் சந்தித்தோம். அப்போதே ‘நாம் திரும்பவும் சேர்ந்து படம் பண்ணலாம்’ என்று தனுஷ் சார் கூறினார். அப்போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. ‘காக்கி சட்டை’ படத்தின் கதை முதலில் தனுஷ் சாருக்காக பண்ணியது. ‘ஆடுகளம்’ நேரத்தில் அவரிடம் இந்தக் கதையை சொல்லியிருந்தேன்.
இதை சிவகார்த்திகேயனை வைத்து பண்ணலாமா என்று கேட்டபோது அவரும் தாராளமாக சம்மதித்தார். தனுஷுக்காக நான் பண்ணிய கதை, ‘பொல்லாதவன்’ பாணியில் இருந்தது. அதை சிவகார்த்திகேயனுக்கு ஏற்றவாறு கொஞ்சம் மாற்றினேன்.
‘எதிர்நீச்சல்’ சிவகார்த்திகேயனுக்கும், ‘காக்கி சட்டை’ சிவகார்த்திகேயனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
‘எதிர்நீச்சல்’ படத்தை எடுக்கும்போது சிவகார்த்திகேயன் படங்களுக்கு பெரியளவு வியாபாரம் கிடையாது. அதற்கு பிறகு அவருடைய படங்களின் வியாபாரம் எங்கேயோ போய்விட்டது. ஆனால், அந்த வளர்ச்சியை தனது தலையில் ஏற்றிக் கொள்ளாமல் இப்போதும் பழக்க வழக்கத்தில் அதே ‘எதிர்நீச்சல்’ சிவகார்த்தி கேயனாக அவர் இருக்கிறார்.
நடிப்பில் அவருக்கு இருக்கும் ஈடுபாடு என்பது என்னை பிரமிக்க வைக்கிறது. இப்படத்துக்காக நிறைய அடிபட்டிருக்கிறார். உடம்பையும் குறைத்திருக்கிறார்.
தனுஷுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் சண்டை என்று அடிக்கடி செய்திகள் வருகிறதே?
அது பொய்ச் செய்தி. ‘எதிர் நீச்சல்’ படத்துக்கே சிவகார்த்திகேயன் கேட்ட சம்பளத்தை விட அதிகமாக கொடுத்தவர் தனுஷ். அதே போல ‘காக்கி சட்டை’ படத் துக்கு சிவா கேட்ட சம்பளத்தை விட அதிகமாக கொடுத்தார் தனுஷ். அவர் கள் இருவரும் இப்போதும் நல்ல நண்பர் கள். சிவாவின் வளர்ச்சி தனுஷுக்கு பிடிக்கவில்லை என்றெல்லாம் செய்திகள் வருகின்றன.
தமிழ்ச் சினிமாவில் தனுஷ் ஒரு இடத்தில் இருக்கிறார், சிவா வேறு இடத்தில் இருக்கிறார். இருவருக்குள்ளும் போட்டி என்பது சாத்தியமில்லாத ஒன்று. இருவருக்குள்ளும் நீங்கள் நினைத் துப் பார்க்க முடியாத நட்பு இருக் கிறது. அந்த நட்பை நேரடியாகப் பார்த்தவன் நான்.
பாலுமகேந்திராவின் பட்டறையில் இருந்து வந்தவர் நீங்கள். அவரிடம் இருந்து என்ன கற்றுக் கொண்டீர்கள்?
தனித்துவமாக இருக்க வேண்டும் என்பதை அவரிடம் இருந்துதான் கற்றுக் கொண்டேன். எப்போதுமே எளிமையாக இருக்க வேண்டும். இயக்குநர் பணியில் வெற்றி, தோல்விகளை தாங்கி கொள் ளும் பக்குவம் வேண்டும் என்று நிறையச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.
ஒரு காட்சி எப்படி இருக்க வேண்டும் என்ற சினிமா மொழி அவர் சொல்லிக் கொடுத்ததுதான். ‘உனக்கு என்ன பிடிக்குமோ அதை பண்ணு, அதுதான் நல்லாயிருக்கும்’ என்பார்.
பிப்ரவரி 13-ம் தேதி பாலு மகேந்திராவின் முதலாவது நினைவு நாள். அவரைப் பற்றி உங்கள் மனதில் இருந்து நீங்காத சம்பவம் ஒன்றைச் சொல்லுங்கள்?
இது நான் கேள்விப்பட்ட சம்பவம்தான். ஒருநாள் அலுவலகப் பையன் ஒருவனை மருந்து கடைக்கு அனுப்பி மாத்திரைகள் வாங்கி வரச் சொல்லியிருக்கிறார். அந்த பையன் திரும்ப வரும்போது, 50 ரூபாயை கணக்கில் விட்டுவிட்டு வந்துவிட்டான். அதை அவன் தான் எடுத்துவிட்டான் என்று நினைத்து, சார் எல்லார் முன்னிலையிலும் அவனை திட்டியிருக்கிறார்.
சிறிது நேரம் கழித்து மருந்து கடையில் இருந்து போன் செய்து, ‘நீங்கள் அனுப்பிய பையன் கணக்கில் 50 ரூபாய் விட்டுவிட்டார், வந்து வாங்கிக் கொள்ளுங்கள்’ என்று கூறியிருக்கிறார்கள். உடனே அந்தப் பையனை அழைத்து அனைவர் முன்னிலையிலும் மன்னிப்புக் கேட்டிருக்கிறார் பாலு மகேந்திரா. அவரு டைய படைப்புகளில் இருக்கும் எளிமை தான் அவருடைய குணத்திலும் இருக்கி றது என்பதற்கு இது ஒரு சான்று. அவருடைய அலுவலகத்தில் இருக்கும் பூனை, செடி, பறவைகள், நாய் என அனைத்துக்கும் அவருடைய மனதில் இருக்கும் ஈரம் தெரியும்.
இயக்குநர் துரை.செந்தில்குமார்