

‘என்னை அறிந்தால்’ படத்தின் திருட்டு விசிடிகள் வெளியானது தொடர்பாகவும் இணையதளத்தில் இப்படம் வெளியிடப்பட்டுள்ளது குறித்தும் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் சிபிசிஐடி போலீஸில் புகார் கொடுத்துள்ளனர்.
நடிகர் அஜீத் நடிப்பில் வெளிவந்துள்ள ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தலைமையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.தாணு, துணைத் தலைவர்கள் எஸ்.கதிரேசன், பி.எல்.தேனப்பன் ஆகியோர் நேற்று சிபிசிஐடி எஸ்பி ஜெயலட்சுமியை சந்தித்து மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
‘என்னை அறிந்தால்’ படத்தின் திருட்டு விசிடி வெளிவந்துள்ளதாக அறிகிறோம். இணையதளங்களிலும் இப்படம் எவ்விதமான உரிமையும் பெறாமல் வெளியிடப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் கஷ்டப்பட்டு தயாரித்த திரைப்படம் சில சுயநலக்காரர்களால் திருட்டுத்தனமாக வெளியிடப் படுகிறது. திருட்டு விசிடி களாலும், இதுபோன்ற இணைய தளங்களாலும் எத்தனையோ தயாரிப்பாளர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். இதற்கு காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து திரைப்படத் தொழில் நசியாமல் பாதுகாக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.