

புதிதாக தொடங்கப்பட்டுள்ள 'தமிழ் மாநில கட்சி'யில் கலைத்துறை பிரிவின் மாநிலச் செயலாளராக 'பவர் ஸ்டார்' சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்த் திரையுலகில் பல படங்களில் நடித்து வருபவர் 'பவர் ஸ்டார்' சீனிவாசன். நாயகனாக அறிமுகமானாலும், காமெடி வேடத்தில் நடித்து வந்தார்.
'என்னுடைய வளர்ச்சி, நடிகர் சந்தானத்துக்கு பிடிக்கவில்லை' என்றெல்லாம் பேட்டியளித்து அதிரவைத்தார். அதற்குள், தற்போது அரசியல் களத்தில் இறங்கி இருக்கிறார் 'பவர் ஸ்டார்' சீனிவாசன்.
புதிதாக தொடங்கப்பட்டுள்ள 'தமிழ் மாநில கட்சி'யில் அவர் இணைந்திருக்கிறார். அக்கட்சியின் கலைத்துறையின் மாநிலச் செயலாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இத்தகவல் குறித்து 'பவர் ஸ்டார்' சீனிவாசனிடம் கேட்டபோது, "ஆமாம்... உண்மை தான். கலைத்துறையில் சேவை புரிந்து வருகிறேன். அரசியலில் இறங்கலாம் என்பது என் நீண்ட நாள் ஆசை. தற்போது வக்கீல்கள் அனைவரும் இணைந்து தமிழ் மாநில கட்சி தொடங்கியிருக்கிறார்கள். அக்கட்சியின் தலைவர் கனகராஜ் எனது நண்பர். ஆகவே, அக்கட்சியில் இணைந்து இருக்கிறேன்" என்றார்.
உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவராக பால்கனகராஜ் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.