

'லிங்கா' பட இழப்பீட்டில் 10% தொகையை தரத் தயார் என்ற தயாரிப்பாளர் அறிவிப்பு, விநியோகஸ்தர்கள் தரப்பில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
'லிங்கா' இழப்பீடு தொகை குறித்து பேச்சுவார்த்தையில் தொடர்ச்சியாக இழுபறி நீடித்து வந்தது. இறுதியாக ஈராஸ் நிறுவனம் நஷ்ட ஈடு தொகையில் தங்களது பங்காக எதுவும் தரமுடியாது என்று தெரிவித்து விட்டது.
இதனால் இறுதி முடிவாக, தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் நஷ்டமடைந்த தொகையில் 10% தர தயாராக இருப்பதாக தெரிவித்தார். இத்தகவலை விநியோகஸ்தர்கள் கூறினார் திருப்பூர் சுப்பிரமணியம்.
இதனைத் தொடர்ந்து விநியோகஸ்தர்கள் தரப்பில் கடும் சலசலப்பு ஏற்பட்டது. ஒட்டுமொத்த நஷ்ட ஈடு தொகையில் 10% என்பது மிகவும் குறைவு என்பதால் அதனை ஏற்க விநியோகஸ்தர்கள் மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள்.
சென்னையில் நாளை (சனிக்கிழமை) விநியோகஸ்தர்கள் தரப்பினர் ஒன்றிணைந்து பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தவிருக்கிறார்கள். அந்தச் சந்திப்பில், 'லிங்கா' படத்தின் மொத்த பட்ஜெட் என்ன, படத்தை என்ன விலைக்கு விற்றார்கள், யாருக்கெல்லாம் லாபம், யாருக்கெல்லாம் எவ்வளவு இழப்பு என அனைத்து நிதி சார்ந்த தகவல்களையும் அதிகாரபூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள்.
அதனைத் தொடர்ந்து தங்களுக்கு 10% நஷ்ட ஈடு போதாது என்பதையும் தெளிவுப்படுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்றையும் அறிவிக்க இருக்கிறார்கள்.
விநியோகஸ்தர்களின் இந்த முடிவால், 'லிங்கா' படக்குழுவினர் பெரும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். இம்முடிவால் தற்போது 'லிங்கா' பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுக்க இருக்கிறது.