

'லிங்கா' இழப்பீடு விவகாரத்தில், ரஜினிக்கு எதிராக அகில இந்திய இந்து மகாசபா அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.
'லிங்கா' படத்தின் மூலம் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட தயாரிப்பாளர் 10% நஷ்ட ஈடு தொகை தான் தரமுடியும் என்று தெரிவித்திருக்கிறார். இதனை விநியோகஸ்தர்கள் ஏற்க மறுத்து பிச்சை எடுக்கும் போராட்டத்தை அறிவித்திருக்கிறார்கள்.
இப்போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு பல்வேறு அரசியல் கட்சிகளை சந்தித்து வருகிறார்கள் விநியோகஸ்தர்கள். இந்நிலையில் விநியோகஸ்தர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அகில இந்திய இந்து மகா சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், "'லிங்கா' நஷ்ட ஈடு விவகாரத்தில் விநியோகஸ்தர்களின் போராட்டம் நியாயமான ஒன்றாகும். ரஜினிகாந்தை நம்பி முதலீடு செய்திருப்பதால் அவரிடம் நிவாரணம் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது.
தமிழ்நாட்டில் தமிழர்களை யார் வஞ்சித்தாலும் அதனை எங்கள் அமைப்பு எதிர்க்கும். 500 திரையரங்கு உரிமையாளர்களையும், 9 விநியோகஸ்தர்களையும் காக்க வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும். எனவே விநியோகஸ்தர்கள் நடத்த இருக்கும் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் குடும்பம் குடும்பமாக கலந்து கொள்வோம். அவர்களின் துயரைத் துடைப்போம்.
தமிழர்களை வஞ்சிக்கும் நடிகர்களை தமிழக முதல்வர் வேட்பாளராக அறிவிக்க நினைக்கும் கட்சிகள் அவர்களின் இரட்டை வேடங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களால் தமிழகத்துக்கு எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை." என்று தெரிவித்திருக்கிறார்கள்.