

சித்தார்த் மற்றும் சமந்தா இருவருமே 'பெங்களூர் டேஸ்' தென்னந்திய ரீமேக்கில் இருந்து விலகியதால், தற்போது யார் நடிக்கவிருக்கிறார்கள் என்பதில் குழப்பம் தொடங்கியது.
பஹத் பாசில், நஸ்ரியா நஸீம், துல்கர் சல்மான், நிவின் பவுலி, பார்வதி, இஷா தல்வார், நித்யா மேனன் என மலையாள திரையுலகைக் கலக்கும் இளமைப் பட்டாளம் அனைவரும் 'பெங்களூர் டேஸ்' படத்தில் நடித்தனர்.
அஞ்சலி மேனன் இயக்கிய இப்படம் தனி கவனம் பெற்றதோடு, வர்த்தகத்துடன் விமர்சன ரீதியாகவும் பாராட்டப்பட்டது. 9 கோடியில் தயாரிக்கப்பட்ட 'பெங்களூர் டேஸ்' ரூ.50 கோடி வசூலை அள்ளியது.
தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக் உரிமையை பி.வி.பி சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றி 'பொம்மரிலு' பாஸ்கர் இயக்குவார் என்று அறிவித்தது. அதனைத் தொடர்ந்து யாரெல்லாம் நடிக்கவிருக்கிறார்கள் என்று எதிர்பார்ப்பு நிலவியது. சித்தார்த், சமந்தா, ஆர்யா, சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிப்பார்கள் என்று தகவல்கள் வெளியாகின.
சித்தார்த்துடனான சமந்தாவின் காதல் முடிவு வந்திருப்பதைத் தொடர்ந்து, "'பெங்களூர் டேஸ்' ரீமேக்கில் நடிக்கவில்லை" என்று ட்விட்டர் தளத்தில் தெரிவித்தார் சமந்தா. அவரைத் தொடர்ந்து சித்தார்த் "நான் 'பெங்களூர் டேஸ்' ரீமேக்கில் நடிக்கவில்லை. 2015ம் ஆண்டு என்ன படங்களில் நடிக்கவிருக்கிறேன் என்று விரைவில் அறிவிக்கிறேன். 'எனக்குள் ஒருவன்' படத்திற்காக காத்திருங்கள்" என்று தெரிவித்திருக்கிறார்.
சித்தார்த், சமந்தா இருவரிம் விலகலைத் தொடர்ந்து, 'பெங்களூர் டேஸ்' ரீமேக் யார் நடிக்கவிருக்கிறார்கள் என்பதில் குழப்பம் தொடங்கி இருக்கிறது.