

'அனேகன்' படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்கள் நீக்கப்பட்டுள்ளதால், தற்போது அப்படத்தை வெளியிடுவதில் இருந்த சிக்கல் முடிவுக்கு வருகிறது.
தனுஷ், அமைரா, கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'அனேகன்' படத்தை இயக்கியிருக்கிறார் கே.வி.ஆனந்த். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
தமிழ்நாடு திருக்குறிப்பு தொண்டநாயனார் மகாசபைத் தலைவர் எஸ்.மாரிச்செல்வம், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அம்மனுவில், "தனுஷ் நடித்துள்ள 'அனேகன்' திரைப்படம் வருகிற 13-ம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியிடப்பட்டது. படத்தில், வண்ணார் சமூகப் பெண்களை இழிவுபடுத்தும் வசனங்கள் மற்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
எனவே, அந்தப் படத்தை திரையிட தடை விதிக்கக் கோரியும், காட்சிகளை நீக்கக் கோரியும் பிப்.4-ல் மனு கொடுத்தேன். அந்த மனு மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, பிப்.13-ல் அனேகன் படத்தை வெளியிடத் தடை விதித்து உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, "திரைப்படம் தொடர்பாக மத்திய திரைப்பட தணிக்கை துறையைத்தான் அணுக வேண்டும்" எனக் கூறி மனுவை திரும்பப் பெற உத்தரவிட்டார்.
இந்நிலையில், சர்ச்சைக்குரிய சில வசனங்களை 'அனேகன்' திரைப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் இருவருமே நீக்கி விட்டார்கள் என்று தணிக்கை வாரியத்தின் பிராந்திய தலைவர் எஸ்.வி.சேகர் தெரிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பால் 'அனேகன்' திரைப்படம் சிக்கலில் இருந்து விடுபட்டு இருக்கிறது.