

சென்னையில் புற்றுநோய் பாதித்த 3 குழந்தைகளின் தன்னை சந்திக்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றி வைத்தார் விஜய்.
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'புலி' படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் இப்படத்தில் விஜய்யுடன் நடித்து வருகிறார்கள்.
சென்னையில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் புற்றுநோய் பாதித்த குழந்தைகள் விஜய்யை பார்த்து அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற தங்களது ஆசையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இவர்களது ஆசை 'Make A Wish India' என்ற தொண்டு நிறுவனம் மூலமாக விஜய்க்கு தெரியப்படுத்தப்பட்டது.
"படப்பிடிப்பின் இடைவெளியில் பார்த்தால் நன்றாக இருக்காது. நான் அலுவலகத்திற்கு வருகிறேன். அங்கு கூட்டிக் கொண்டு வாருங்கள்" என்று கூறி இருக்கிறார். அக்குழந்தைகளை பார்த்த விஜய், அவர்களிடம் நீண்ட நேரம் கலந்துரையாடி இருக்கிறார். அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டு அவர்களது ஆசையை நிறைவேற்றி வைத்திருக்கிறார்.
"இவ்வளவு அழகான சிரிப்பை நான் இதற்கு முன் கண்டதில்லை" என்று இக்குழந்தைகள் சந்திப்பு குறித்து ரசிகர்களுடன் கலந்துரையாடும் ட்விட்டர் பக்கத்தில் விஜய் தெரிவித்துள்ளார்.
'Make A Wish India' என்ற தொண்டு நிறுவனம் ஏற்கனவே இம்மாதியான குழந்தைகளின் ஆசையை நிறைவேற்ற சச்சின், சல்மான் கான் போன்ற நடிகர்களை சந்தித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.