

'என்னை அறிந்தால்' படத்துக்கு கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து, சில நாட்கள் கழித்து முழுமையான படம் வெளியாகும் என்று கெளதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார்.
கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'என்னை அறிந்தால்' நாளை (பிப்ரவரி 5) வெளியாகிறது. இப்படத்தின் சென்சார் சான்றிதழ்படி படம் 3 மணி நேரம் 8 நிமிஷம் என இருக்கிறது.
ஆனால், படம் மிகவும் நீளமாக வந்துள்ளதால் சுமார் 15 நிமிடக் காட்சிகளை படக்குழுவே குறைத்துள்ளது. இதனால், படத்தின் நீளம் 2:46 நிமிடம்தான் என்று படக்குழு அறிவித்திருக்கிறது. அதன்படி, முதல் 3 நிமிடம் டைட்டில் கார்டு, இறுதி 3 நிமிடம் டைட்டில் கார்டு என 6 நிமிடங்கள் கழித்தால் மொத்தம் 2:40 நிமிடங்கள் இருக்கிறது 'என்னை அறிந்தால்'.
இந்நிலையில், 'என்னை அறிந்தால்' படத்திற்கு கிடைக்கப் போகும் வரவேற்பைப் பொருத்து 4 வாரங்கள் கழித்து, சென்சார் செய்யப்பட்ட 3 மணி நேரம் 8 நிமிடக் காட்சிகள் கொண்ட முழுமையான படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாக இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார்.