லிங்கா இழப்பீடு: ரஜினி பிறப்பித்த வாய்மொழி உத்தரவு

லிங்கா இழப்பீடு: ரஜினி பிறப்பித்த வாய்மொழி உத்தரவு
Updated on
1 min read

'லிங்கா' படத்தால் பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு இழப்பீடு எவ்வளவு என்பதை தயாரிப்பாளர் இன்று முடிவு செய்கிறார்.

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘லிங்கா’ திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. இந்தப் படத்தை வெளியிட்டதால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக விநியோகஸ்தர்கள் சிலர் குற்றம்சாட்டினர்.

தங்கள் இழப்பை ஈடுகட்ட, தயாரிப்பாளர் பணத்தை திரும்பத் தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். தயாரிப்பாளர் தரப்பில் இருந்து இதற்கு செவிசாய்க்காததால் நஷ்ட ஈடு வழங்கக்கோரியும் ரஜினிகாந்த் இந்த விஷயத்தில் தலையிட்டு தங்களுக்கு பணம் கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்றும் கோரிக்கை வைத்து சென்னையில் உண்ணாவிரதம் இருந்தனர்.

இது தொடர்பாக, திருப்பூர் சுப்பிரமணியத்தை அழைத்த ரஜினிகாந்த், “விநியோகஸ்தர்களுக்கு ‘லிங்கா’ படத்தால் நஷ்டம் என்பது எனக்கு தெரியும். ஆனால், அவர்கள் நடந்து கொண்ட விதம் எனக்கு பிடிக்கவில்லை. இருந்தாலும் என்னால் யாரும் நஷ்டமடைய வேண்டாம். தயாரிப்பாளரிடம் இதுபற்றி பேசிவிட்டேன்” என்று கூறியுள்ளார்.

ரஜினியின் வேண்டுகோளை அடுத்து திருப்பூர் சுப்பிரமணியத்தை தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷை சந்தித்தார். “பணத்தை திருப்பிக் கொடுப்பதில் எனக்கு பிரச்சினையில்லை. ஆனால் ‘லிங்கா’வின் வசூல் என்ன?, அப்படத்தால் எவ்வளவு நஷ்டம் என்ற முழுவிவரம் எனக்கு வேண்டும்” என்று கேட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து திருப்பூர் சுப்பிரமணியம் அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் போன் செய்து எவ்வளவு கொடுத்து வாங்கினீர்கள், எவ்வளவு வசூல், எவ்வளவு நஷ்டம் என்ற விவரத்தை தயாரிப்பாளர் அலுவலகத்தில் கொடுக்குமாறு கூறினார்.

தற்போது விநியோகஸ்தர்கள் கொடுத்த வசூல் கணக்குகள் அனைத்தையுமே சரிபார்த்து தயாரிப்பாளரிடம் கொடுத்துவிட்டார் திருப்பூர் சுப்பிரமணியம். தயாரிப்பாளர் தரப்பில் இருந்து யாருக்கு எவ்வளவு நஷ்ட ஈடு என்பதை இன்று முடிவு செய்கிறார்கள்.

நடைபெற்று வரும் விஷயங்கள் குறித்து திருப்பூர் சுப்பிரமணியத்தை அழைத்த ரஜினி, "யாருடைய மனமும் வருத்தப்படாதபடி கொடுங்கள்" என்று கூறியிருக்கிறார்.

அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் பணம் கொடுத்தவுடன், பத்திரிகையாளர் சந்திப்பு வைத்து இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in