

‘லிங்கா’ படத்தை வெளியிட்டதால் விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டும் விதமாக தயாரிப்பாளரிடம் இருந்து அவர்களுக்கு பணம் பெற்றுத்தர ரஜினிகாந்த் ஏற்பாடு செய்வதாக கூறப்படுகிறது.
கே.எஸ்.ரவிகுமார் இயக்கத் தில் ரஜினிகாந்த் நடித்த ‘லிங்கா’ திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. இந்த படத்தை வெளியிட்டதால் தங்க ளுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக விநியோகஸ்தர்கள் சிலர் குற்றம் சாட்டினர். தங்கள் இழப்பை ஈடுகட்ட, தயாரிப்பாளர் பணத்தை திரும்பத் தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். தயாரிப்பாளர் தரப்பில் இருந்து இதற்கு செவிசாய்க்காததால் நஷ்ட ஈடு வழங்கக்கோரியும் ரஜினிகாந்த் இந்த விஷயத்தில் தலையிட்டு தங்களுக்கு பணம் கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்றும் கோரிக்கை வைத்து சென்னையில் உண்ணாவிரதம் இருந்தனர்.
முன்னதாக ரஜினிகாந்த் நடித்த ‘பாபா’, ‘குசேலன்’ ஆகிய படங்களால் விநியோகஸ்தர் களுக்கு இழப்பு ஏற்பட்டபோது ரஜினிகாந்த், பணத்தை திருப்பிக் கொடுத்தார். இதற்கு திருப்பூர் சுப்பிரமணியம் என்ற விநியோகஸ் தர் ஏற்பாடு செய்திருந்தார்.
இந்நிலையில், தற்போது திருப்பூர் சுப்பிரமணியத்தை அழைத்த ரஜினிகாந்த், “விநியோகஸ்தர்களுக்கு ‘லிங்கா’ படத்தால் நஷ்டம் என்பது எனக்கு தெரியும். ஆனால், அவர்கள் நடந்து கொண்ட விதம் எனக்கு பிடிக்கவில்லை. இருந்தாலும் என்னால் யாரும் நஷ்டமடைய வேண்டாம். தயாரிப்பாளரிடம் இதுபற்றி பேசிவிட்டேன்” என்று கூறியுள்ளார்.
ரஜினியின் வேண்டுகோளை அடுத்து திருப்பூர் சுப்பிரமணியத்தை தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் சந்தித்துள்ளார். “பணத்தை திருப்பிக் கொடுப்பதில் எனக்கு பிரச்சினையில்லை. ஆனால் ‘லிங்கா’வின் வசூல் என்ன?, அப்படத்தால் எவ்வளவு நஷ்டம் என்ற முழுவிவரம் எனக்கு வேண்டும்” என்று கேட்டுள்ளார். இதைத் தொடர்ந்து திருப்பூர் சுப்பிரமணியம் அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் போன் செய்து இதுபற்றிய தகவலை திரட்டி வருகிறார்.
இந்த தகவல்களை சரிபார்த்த பிறகு அதன் அடிப்படையில் விநியோகஸ்தர்களுக்கு பணம் கொடுக்க தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ‘லிங்கா’ பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என்று நம்பப்படுகிறது.