ஐ-க்கு திருநங்கைகள் எதிர்ப்பு: ஷங்கர் வீட்டின் முன்பு போராட்டம் நடத்த முடிவு

ஐ-க்கு திருநங்கைகள் எதிர்ப்பு: ஷங்கர் வீட்டின் முன்பு போராட்டம் நடத்த முடிவு
Updated on
1 min read

'ஐ' படத்தில் தங்களைப் போன்றோரை கொச்சைப்படுத்தி இருப்பதாகக் கூறி, இயக்குநர் ஷங்கர் வீட்டின் முன்பு நாளை (சனிக்கிழமை) அல்லது நாளை மறுநாள் போராட்டம் நடத்துவது என திருநங்கைகள் முடிவு செய்துள்ளனர்.

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'ஐ'. இப்படத்தில் வில்லன்களில் ஒருவராக ஒஜாஸ் ரஜானி என்ற திருநங்கை நடித்துள்ளார். இவர் இந்தி அளவில் பிரபலமான ஒப்பனைக் கலைஞராவார். படத்திலும் ஒப்பனைக் கலைஞராக வரும் இவரது கதாபாத்திரம், விக்ரம் தனக்கு கிடைக்கவில்லை என்று அவரைப் பழிவாங்கும்படி அமைந்திருக்கும்.

இந்நிலையில், இன்று 'ஐ' படத்திற்கு எதிராக திருநங்கைகள் அனுப்பிய அறிக்கை ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்த பானு என்ற ஒருங்கிணைப்பாளரை, தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினோம். அப்போது அவர் கூறியது:

"'ஐ' படத்தில் திருநங்கைகளை மிகவும் தவறாக சித்தரித்திருக்கிறார்கள். இப்படத்தில் திருநங்கை அறிமுகமாகும் காட்சியில் விக்ரம் மற்றும் சந்தானம் இருவரும் இணைந்து "ஊரோரம் புளியமரம்" பாடலை பாடி கிண்டல் செய்வார்கள். மேலும், அந்த பாத்திரமே ஆண்களின் உடலுக்கு அலைவது போல சித்தரித்திருக்கிறார்.

நானும் அந்தப் படம் பார்த்துக் கொண்டிருந்தேன். இடைவேளையின்போது அனைவருமே என்னையும் கிண்டல் செய்ய ஆரம்பித்தார்கள். திருநங்கைகள் இப்போது பல்வேறு சாதனைகள் செய்யத் தொடங்கிவிட்டோம். தமிழ்த் திரையுலகில் இருப்பவர்கள் கொஞ்சம் வளர வேண்டும்.

நம் சமூகத்தில் ஏற்கெனவே திருநங்கைகள் என்றாலே தவறான கண்ணோட்டத்தில் பார்த்து வருகிறார்கள். இப்படத்தை பார்ப்பவர்கள் அனைவருமே அந்தக் கண்ணோட்டமே மேலோங்கும். இறுதி காட்சியில் சந்தானம் கிண்டல் செய்திருக்கிறார். மேலும், சந்தானம் எப்போதுமே திருநங்கைகளை தவறாகவே பேசி வருகிறார்.

'ஐ' படத்துக்கு எதிராக இயக்குநர் ஷங்கர் வீட்டின் முன்பு நாளை அல்லது நாளை மறுநாள் போராட்டம் நடத்த இருக்கிறோம்.

மேலும், தமிழக அரசு திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே எங்களால் படத் தணிக்கை குழுவில் இடம்பெற்று, திருநங்கை கொச்சைப்படுத்தும் காட்சிகளை எல்லாம் நீக்க முடியும்" என்று பானு தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in