நடிகர் விஜய் புறக்கணிக்கப்பட்ட கதை: தந்தை எஸ்.ஏ.சி. உருக்கம்

நடிகர் விஜய் புறக்கணிக்கப்பட்ட கதை: தந்தை எஸ்.ஏ.சி. உருக்கம்
Updated on
1 min read

நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கி தயாரித்து நடித்திருக்கும் 'டூரிங் டாக்கீஸ்' படத்தின் இசை வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், கே.வி.ஆனந்த் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில்

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசியது:

"நான் ஒண்ணும் 20 வயசுப் பையனாக இப்படத்தில் நடிக்கவில்லை. 60 வயதான ஒரு மனுஷனுக்கு அந்த வயதில் என்னென்ன குறும்புகள் செய்வாரோ அந்த மாதிரியான வயதான பாத்திரத்தில்தான் நடித்திருக்கிறேன்.

நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு ப்ளாட்பாரத்தில் தூங்கி எழுந்து வாய்ப்பு தேடுவேன். அப்புறம் இயக்குநராகி நிறைய ஹிட் படங்கள் கொடுத்து நல்லா சம்பாதித்து பின்னாடி இதுபோது, இதற்கு பிறகு படங்கள் இயக்க வேண்டாம், தயாரிக்கவும் வேண்டாம் என்று முடிவு செய்தேன்.

அப்போதுதான் என்னோட பையன் விஜய் நடிகனாக வேண்டும் என்று ஆசைப்பட்டார். நான் அப்போது திரையுலகில் ரொம்ப முக்கியமான பெரிய இயக்குநர்கள் எல்லோர்கிட்டயும் என் பையனைக் கூட்டிட்டுப் போய் காட்டி "சார்... என் பையனை நாயகனாக வைத்து ஒரு படம் இயக்கி கொடுங்கள். எவ்வளவு செலவு என்றாலும் நான் பார்த்துக்கிறேன்"னு சொன்னேன். ஆனால் யாருமே விஜய்யை வைத்து படம் பண்ண தயாராக இல்லை" என்று நடிகர் விஜய் புறக்கணிக்கப்பட்ட கதையை உருக்கமாக கூறினார்.

மேலும் தொடர்ந்தவர், "விஜய்யை வைத்து யாரும் படம் இயக்க முன்வரவில்லை என்ற நிலையில்தான், நானே மறுபடியும் இயக்குநராகி என் மகனை வைத்து சொந்தமாக படங்களை எடுக்க ஆரம்பித்தேன். இன்றைக்கு விஜய் எவ்வளவு பெரிய ஹீரோ? நல்ல மருமகள், நல்ல பேரக்குழந்தைகள், நிறைய பணம் எல்லா வசதிகளும் இருக்கிறது.

போதும்... இதற்கு மேல் நாம ஏன் படங்கள் இயக்க வேண்டும் என்று நானேதான் முடிவெடுத்தேன். இயக்கம் மட்டும்தான் பண்ண மாட்டேன். மற்றபடி என்னுடைய தயாரிப்பு நிறுவனத்தில் திறமையான இயக்குநர்களை வைத்து படங்களை தயாரிப்பேன்" என்றார் எஸ்.ஏ.சந்திரசேகரன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in