

“மக்களின் யதார்த்த வாழ்வியலை படங்களில் பதிவு செய்யவேண்டும் என்ற விருப்பத்தோடுதான் நான் சினிமா உலகுக்கு வந்தேன். அந்த வகையில் என் படைப்புகள் உன்னத சினிமாவாக கொண்டாடப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று நம்பிக்கையோடு பேசத் தொடங்குகிறார் அறிமுக இயக்குநர் ரவி.
ரவி
இவரது இயக்கத்தில் உருவாகிவரும் ‘டம்மி டப்பாசு’ திரைப்படம் விரைவில் திரையைத் தொடவுள்ளது. படத்தின் இறுதிக் கட்ட வேலையில் பரபரப்பாக இருக்கும் அவரிடம் பேசியதிலிருந்து...
அது என்ன ‘டம்மி டப்பாசு’?
சினிமாவில் மட்டும்தான் கதாநாயகன், கதாநாயகி, வில்லன், குணச்சித்திர நடிகர் கள் இருக்கிறார்கள். நிஜ வாழ்க்கையில் அப்படி யாரும் தனித்தனியாக இல்லை. எல்லோருக்கும் நகைச்சுவை உணர்வு இருக்கும். ஒரு சிலர் சில தவறுகள் செய்து டம்மி ஆகியிருப்போம். மழையில் நனைந்த பட்டாசு நமத்துப் போய் வெடிக்காமல் இருக்குமே.. அதைப்போல. அதைத் தான் டம்மி பட்டாசு என்று சொல்வோம். அதுபோல் வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் வெடிக்காமல் போயிருக்கும். அதைத்தான் இந்தப் படத்தில் பதிவு செய்திருக்கிறேன்.
சென்னை கே.கே நகர் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் நடக்கும் இயல்பான காதல் கதையை யதார்த்தமாகவும், நகைச் சுவை கலந்தும் சொல்லியிருக்கிறேன். சென்னை பாஷையில் பட்டாசை ‘டப்பாசு’ என்றுதான் சொல்லுவோம். அதனால்தான் ‘டம்மி டப்பாசு’ என்று படத்துக்கு பெயர் வைத்துள்ளோம்.
சென்னை பற்றிய பதிவாக இந்தப் படம் இருக்குமா?
வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை பற்றிய முழுமையான பதிவாக இது இருக்கும். அங்கு வாழும் மக்கள் சம்பந்தப்பட்ட அடிதடி, வெட்டுக்குத்து, அரசியல் ஆகியவற் றைத்தான் இதுவரை படங்களில் பார்த்திருப்போம். அவர்கள் மனதையும், அன்பையும் நாம் பார்த்து ரசித்ததில்லை. அந்த அனுபவத்தை ‘டம்மி டப்பாசு’ கொடுக்கும்.
மலையாள நடிகர் பிரவீன் பிரேமை எப்படி தமிழுக்குக் கொண்டு வந்தீர்கள்?
இந்தப் படத்தின் ஹீரோ கேரக்டருக்கு கொஞ்சம் குண்டாக ஒரு ஆள் தேவைப்பட்டார். பிரவீன் பிரேம் நடித்த ‘க்ரோக்கடைல் லவ் ஸ்டோரி’ மலையாள படம் பார்த்ததும் இவர்தான் ஹீரோ என்று முடிவு செய்துவிட்டேன். அவரைச் சந்தித்து கதை சொன்னதும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். இந்தப் படத்தின் டிரெயிலரைப் பார்த்துவிட்டு அவரை இந்திப் படத்தில் நடிக்க அழைத்திருக்கிறார்கள். இதை என் படத்துக்கு கிடைத்த வெற்றியாகவே நினைக்கிறேன்.
இந்தப் படத்துக்கு தேவாவை எப்படி இசையமைக்க வைத்தீர்கள்?
இது முழுக்க முழுக்க சென்னையை மையமாகக் கொண்ட படம். படத்தில் இரண்டு கானா பாடல்கள் இருக்கிறது. கானாவுக்கு தேவாவை விட வேறு நல்ல ஆள் கிடைக்குமா? அதனால் அவரைச் சந்தித்து பேசினோம். கதையைச் சொன்னதும் உடனே டியூன் போட தயாராகி விட்டார். அறிமுக இயக்குநர் படத்தில் இசையமைக்கணுமா என்று அவர் யோசித்திருந்தால் எனக்கு நல்ல பாடல்கள் கிடைத்திருக்காது. தேவா சாருக்கு என் நன்றி.
அடுத்ததாக என்ன செய்யப்போகிறீர்கள்?
இரண்டரை மணி நேரப் படத்தையும் கறுப்பு வெள்ளையில் எடுக்க திட்டமிட்டு இருக்கிறேன். படத்தின் பெயர் ‘கப்சா’. கடந்த இரண்டு வருடங்களில் தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்த மூன்று பேர் நாயகர்களாக நடிக்கிறார்கள். ஏப்ரல் 14-ல் ஷூட்டிங் தொடங்குகிறது.
விரைவில் அதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன்.