

‘‘எல்லோரும் எப்படி கவிதை எழுதுகிறோமோ, அதேபோல பலரும் சினிமா எடுக்க வருவார்கள்” என நடிகர் கமல்ஹாசன் கூறினார்.
‘இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன்’ மற்றும் தமிழக அரசு இணைந்து நடத்தும் 11- வது சென்னை சர்வதேச திரைப்பட விழா சென்னையில் நேற்று தொடங்கியது. ‘இந்து’ என்.ராம், நடிகர்கள் கமல்ஹாசன், அமீர்கான், ‘இந்து’ என்.ரவி, நடிகை லட்சுமி, இந்தோ சினி அப்ரிசியேஷன் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் மணிரத்னம், பாலுமகேந்திரா, இளையராஜா உள்ளிட்ட பிரபலங்கள் கேட்டிருந்த கேள்விகளுக்கு ’நேர்காணல்’ பாணியில் பதிலளித்துப் பேசிய கமல் ” சினிமாவில் தொழில்நுட்பம் மாறிக்கொண்டே இருக்கும். கருவிகள் மாறலாம். ஆனால் கலை மாறாது. எல்லோரும் எப்படி கவிதை எழுதுகிறோமோ, அதேபோல பலரும் சினிமா எடுக்க வருவார்கள். சினிமா அத்தனை இலகுவாகிவிடும். கப்பலோட்டிய தமிழன் படத்தின் சுப்ரமணியசிவா கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன்” என்று கூறினார்.
“நான் கமல் ரசிகன்!”
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமீர்கான் பேசும்போது “நான் கமல் ரசிகன். என்னை இந்த விழாவுக்கு அழைத்த உங்கள் அனைவருக்கும் நன்றி. நல்ல சினிமாவுக்காக இங்கே முயற்சிக்கும் அனைத்து திரைப்பட இயக்குநர்கள், மற்றும் இந்த விழாவுக்காக சேவைபுரியும் தன்னார்வத் தொண்டர்கள் என அனைவரையும் பாராட்டுவோம்” என்றார்.
தமிழக அரசு பங்கேற்பு இல்லை
தமிழக அரசு கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச திரைப்பட விழாவுக்கு நிதியுதவி அளித்து வந்ததோடு தொடக்க நிகழ்வில் செய்தித்தொடர்புத்துறை அமைச்சர் கலந்து கொள்வதும் வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் 11 வது திரைப்பட விழாவில் தமிழக அரசு சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை. தமிழக அரசு நிதியுதவி அளித்ததாகவும் நிகழ்ச்சியில் அறிவிக்கவில்லை.
56 நாடுகள் 165 படங்கள்
இந்த வருடம் கான்ஸ், பெர்லின், வெனிஸ் ஆகிய இடங்களில் நடந்த சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற திரைப்படங்கள், சென்னை விழாவில் திரையிடப்படவுள்ளன. 56 நாடுகளைச் சேர்ந்த 165 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
திரைப்பட விழாவின் மற்றொரு முக்கிய அங்கமாக, 4வது ஆண்டாக சிறந்த தமிழ் படங்களை தேர்ந்தெடுத்து பரிசு வழங்கும் தமிழ்படங்களுக்கான போட்டியும் சூடு பிடித்திருக்கிறது.போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் படங்களுக்கு 6 லட்ச ரூபாய் ரொக்கப்பரிசு பகிர்ந்து வழங்கப்பட இருக்கிறது. இறுதிப் பட்டியலில் ‘ஆதலால் காதல் செய்வீர்’, ‘6 மெழுகுவர்த்திகள்’, ‘அன்னக்கொடி’, ‘ஹரிதாஸ்’, ‘கும்கி’, ‘மரியான்’, ‘மூடர்கூடம்’, ‘மூன்று பேர் மூன்று காதல்’, ‘பரதேசி’, ‘பொன்மாலைப்பொழுது’, ‘சூது கவ்வும்’, ‘தங்க மீன்கள்’ ஆகிய 12 படங்கள் மோதுகின்றன.
துவக்க விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக பாடகர் கார்த்திக், பியானோ இசைக்கலைஞர் அனில் இணைந்து வழங்கிய மெல்லிசையும் நடிகைகள் ஷோபனா மற்றும் ஸ்வர்ணமால்யா பங்கேற்ற கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.