

ஏற்கெனவே திட்டமிட்டபடி ஜனவரி 14-ல் 'ஐ' திரைப்படம் ரிலீஸ் ஆகும் என்று தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற பி.வி.பி நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டிய கடன் தொகையை செலுத்தாததால், ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடித்துள்ள 'ஐ' படத்தை மூன்று வாரங்களுக்கு வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
ஆனால், ஆஸ்கர் ரவிச்சந்திரன் ஜனவரி 14-ல் 'ஐ' திரைப்படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகும் என்று நேற்றே விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில், பி.வி.பி நிறுவனத்துடனான பிரச்சினை முடிவுக்கு வந்ததாக கூறிய அவர், "நானும் பிவிபி நிறுவனத்தைச் சார்ந்த அரசும் நண்பர்களே. எங்களுக்குள் தகவல் தொடர்பில் சின்ன குளறுபடி இருந்தது. இப்போது எங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் சுமுகமாக பேசித் தீர்த்துக் கொண்டோம். 'ஐ' ஜனவரி 14ல் வெளியாவது உறுதி" என்று தெரிவித்தார்.
எனினும், 'ஐ' தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற இறுதி உத்தரவின் அடிப்படையில்தான், அப்படம் பொங்கலுக்கு வெளிவருமா என்பது உறுதி செய்யப்படும்.