

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு மும்பையில் வரும் 20-ம் தேதி பாராட்டு விழா நடக்கிறது. இந்த பாராட்டு விழாவில் அமிதாப் பச்சன், பின்னணிப் பாடகிகள் லதா மங்கேஷ்கர், எஸ். ஜானகி, பி.சுசிலா உள்ளிட்ட பல திரையுலகப் பிரமுகர்கள் கலந்துகொள்கிறார்கள். பாலிவுட் இயக்குநர் பால்கி இந்த பாராட்டு விழாவுக்கான ஏற்பாடுகளை செய்துவருகிறார்.
இதுகுறித்து பால்கி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
இளையராஜா இசையமைத்துள்ள ‘ஷமிதாப்’ படம், நானும் அவரும் இணைந்துள்ள மூன்றாவது படமாகும். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜனவரி 20 -ம் தேதி மும்பையில் நடக்கிறது. இந்நிகழ்ச்சியோடு சேர்த்து 1000 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இளையராஜாவுக்கு பாராட்டு விழாவையும் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இளையராஜா இசையமைத்த ஒவ்வொரு படமும் ஒவ்வொரு வகையில் தனித்துவம் வாய்ந்தது. அப்படிப்பட்ட முக்கியப் படங்களின் பின்னணி இசையைக் கொண்டு ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம். அதுபோல் அமிதாப் பச்சன் நடித்த படங்களின் முக்கிய காட்சிகள் இடம்பெறும் நிகழ்ச்சியும் நடை பெறவுள்ளது. திரையுலகில் அமிதாப்பும், இளையராஜாவும் இரண்டு ராஜாக்கள். அவர்களைப் பெருமைப்படுத்தும் விழாவாக இந்த விழா அமையும்.
இளையராஜாவின் இசையில், அமிதாப்பச்சன் பாடும் தேசிய கீதத்தையும் உருவாக்கி வருகிறோம். இதை பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். நான் இயக்கியுள்ளேன். குடியரசு தினத்தன்று இந்த தேசிய கீதம் வெளியிடப்படும். இவ்வாறு பால்கி கூறினார். இந்த பேட்டி யின்போது இளையராஜாவும் உடன் இருந்தார்.