

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை அகற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, கவிஞர் வைரமுத்து கோரிக்கை விடுத்துள்ளார்.
வெற்றித் தமிழர் பேரவை சார்பில் திருவள்ளுவர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பேரவையின் தலைவர் கவிஞர் வைரமுத்து பெசன்ட் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
திருவள்ளுவர் தமிழினத்தின் பெருமை. அவரை உயர்த்திப் பிடிப்பதன் மூலம் தமிழர்கள் தங்கள் உயரத்தை உயர்த்திக் கொள்கிறார்கள். ஒவ்வோர் இனத்திற்கும் ஒரு அடையாளம் உண்டு. தமிழ் இனத்தின் அறிவு அடையாளமாய் கருதப்பட வேண்டியவர் திருவள்ளுவர். எனவே, நாம் அவரை மறந்து விடக் கூடாது. திருக்குறளுக்கு இந்திய அளவில் அங்கீகாரம் பெற்றுத்தர தருண்விஜய் எம்.பி. போராடி வருகிறார். அவர், தான் சார்ந்திருக்கும் கட்சியை வளர்ப்பதற்குத்தான் திருவள்ளுவரைக் கையில் எடுத்திருக்கிறார் என சில அறிவாளிகள் கூறுகின்றனர்.
தருண்விஜய் ராமரை தென் னாட்டுக்குக் கூட்டி வரவில்லை. திருவள்ளுவரைத்தான் வடநாட்டுக்கு அழைத்துச் செல்கி றார். ஒருவேளை அரசியலுக்குத் தான் திருவள்ளுவர் பயன்படுத் தப்படுகிறார் என்பதில் கொஞ்சம் உண்மை இருக்குமானால் தமிழகத்தில் எந்த அரசியலும் திருவள்ளுவரை முன்னிறுத்திதான் நடக்க முடியும் என்பது மெய்யாகிறது. அதுவே திருவள்ளுவருக்குக் கிடைத்த வெற்றிதான்.
ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கக் கூடாது. இதுவரை ஏறுதழுவுதல் விளையாட்டில் மனிதர்கள்தான் காயப்பட்டுள்ளனரே தவிர மாடுகள் காயம் அடைந்ததில்லை. எனவே, மிருகவதைத் தடைச்சட்டம் அதற்கு எப்படி பொருந்தும்? எனவே, மத்திய, மாநில அரசுகள் ஜல்லிக்கட்டு போட்டிக்கு நேர்ந்திருக்கும் தடைகளை உடைக்க வேண்டும்.
இவ்வாறு வைரமுத்து கூறினார்.
ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கக் கூடாது. இதுவரை ஏறுதழுவுதல் விளையாட்டில் மனிதர்கள்தான் காயப்பட்டுள்ளனரே தவிர மாடுகள் காயம் அடைந்ததில்லை.