

‘லிங்கா’ திரைப்படத்தால் ஏற்பட்ட பெரும் இழப்பை ஈடு செய்யக் கோரி விநியோகஸ்தர்கள் சென்னையில் நடத்தவுள்ள உண்ணாவிரதப் போராட் டத்துக்கு அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மெரினா பிக்சர்ஸின் நிறுவன நிர்வாகப் பங்குதாரர் சிங்கார வேலன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப் பதாவது:
நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘லிங்கா’ திரைப்படம் டிசம்பர் 12-ம் தேதி வெளியானது. இந்தப் படத்தை திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் விநியோகிக்கும் உரிமத்தை எங்கள் நிறுவனம் பெற்றிருந்தது. இதற்காக, திரையங்க உரிமையாளர்களிடம் இருந்து ரூ.8 கோடி வாங்கியிருந்தோம்.
ரஜினிக்கு கடிதம்
ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு படம் இல்லாததால், போதிய வசூல் கிடைக்கவில்லை. இதனால், திரையரங்க உரிமையாளர்களுக்கு மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
அந்த இழப்பை ஈடுசெய்யும் வகையில் நஷ்டஈடு வழங்க வேண்டும் என படத் தயாரிப்பாளரிடம் மனு அளித்தோம். அதற்கு பதில் இல்லை.
இதுதொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் கவனத்தை ஈர்க்க கடிதம் எழுதினோம். அவரிடமிருந்தும் பதில் இல்லை.
அனுமதி இல்லை
இந்நிலையில், ‘லிங்கா’ படத்தால் திரையங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய வலியுறுத்தி 10-ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த திட்டமிட்டோம். இதற்காக காவல்துறை அனுமதி கோரினோம். அவர்கள் அனுமதி அளிக்கவில்லை. எனவே, எங்களது உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.