

அஜித் பிறந்த நாளான மே-1ம் தேதி சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் 'ரஜினி முருகன்' படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.
சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி வரும் படம் 'ரஜினி முருகன்'. பொன்ராம் இயக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
'ரஜினி முருகன்' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் தொடங்கி நடைபெற்றது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜனவரி 21ம் தேதியில் இருந்து மார்ச் 4ம் தேதி வரை மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.
இப்படத்தை தயாரித்து வரும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம், 'ரஜினி முருகன்' படத்தை அஜித் பிறந்த நாளான மே-1ம் தேதி வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'எதிர் நீச்சல்' மே-1ம் தேதி வெளியாகி அமோக வரவேற்பை பெற்றதால் இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள்.
'உத்தம வில்லன்' மற்றும் 'ரஜினி முருகன்' ஆகிய இரண்டு படங்களையும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திடம் இருந்து ஈராஸ் நிறுவனம் விநியோக உரிமையை வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.