

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியாகி இருக்கும் 'ஐ' திரைப்படம், ரூ.100 கோடி வசூலைத் தாண்டியிருக்கிறது.
ஆஸ்கர் நிறுவனம் தயாரிப்பில் விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் ஜனவரி 14-ம் தேதி வெளியானது 'ஐ'. ஷங்கர் இயக்கியிருந்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருந்தார். பொங்கல் விடுமுறைகளைக் கணக்கில் கொண்டு அதிகமான திரையரங்குகளில் வெளியானது.
இப்படத்திற்கு தமிழகத்தில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வரவேற்பைப் பெற்றது.
"தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் 'ஐ' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. கேரளாவில் தமிழ் படத்திற்கு கிடைத்த அதிக வசூல் என்ற சாதனையை படைத்தது. உலகளவில் சுமார் ரூ.100 கோடி வசூலை 'ஐ' தாண்டிவிட்டது" என்று வர்த்தக ஆய்வாளர் த்ரிநாத் தெரிவித்தார்.
மேலும், ஆந்திராவிலும் 'ஐ' டப்பிங்கிற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. "வெளியான முதல் நாளில் ரூ.9 கோடி அளவில் வசூல் செய்தது. இந்தி 'ஐ' டப்பிங் பதிப்பு ரூ.6 கோடி அளவில் வசூல் செய்திருக்கிறது" என்று த்ரிநாத் தெரிவித்தார்.